
டோனி அடுத்த இன்னிங்க்ஸ்க்கு எப்போதும் தயாராகவே இருப்பார். ஆனால் அதற்குமுன் நிறைய தேடுவார். அவர் தேடல் கைகூடி விட்டால் துணிந்து அடித்து விளையாடுவார். நான் நம்ம மகேந்திரசிங் தோனியை சொல்லவில்லை. ஜாப்போஸ்(Zappos) நிறுவனர் டோனி ஷெய் (Tony Shieh) பற்றி சொல்கிறேன்.
ஒருநாள் நிக் ஸ்வின்மன்(Nick Swinmurn) என்ற தொழில்முனைவோர் ஆன்லைன் மூலமாக ஷூ, செப்பல் உள்ளிட்ட பலதரப்பட்ட காலணிகளை விற்கமுடியும், அதற்கு முதலீடு வேண்டுமென்றும் டோனிக்கு மெயில் அனுப்புகிறார். முதலில் கண்டுகொள்ளாத டோனி, நிக்கின் கடைசி மெயிலில் ஒரு முக்கிய குறிப்பை பார்த்து கவரப்படுகிறார்.
இந்த காலணி விற்பனையில் ஏற்கனவே போஸ்டல் ஆர்டர் மூலமாக 5% வர்த்தகம் நடக்கிறது என்றும், ஆண்டுதோறும் 40 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது என்று நிக் சொன்னதை கேட்கவும் டோனி அவர் நண்பர் ஆல்ப்ரெட்(Alfred) உடன் இணைந்து முதலீடு செய்கிறார். நிக் மூலமாக அந்தத் துறையில் அனுபவம் மிக்க பிரெட்டை(Fred) சந்திக்கிறார். அவர்களது தாகம், நம்பிக்கை அவர்கள் மீது இன்னும் நம்பிக்கை வைக்கிறது. மேலும் இவரது நம்பிக்கை ஜாப்போஸ் கொஞ்சம் வளர்த்து பிறகு பெரிய முதலீட்டாளர்களின் முதலீட்டை கோரலாம் என்பது தான். ஆனால் இவர்களின் LinkExchange-ன் முதலீட்டளர்கள் ஜாப்போஸை நம்பவில்லை.
அப்போது பார்த்து Twin-Tower மீது தீவிரவாத தாக்குதல் நடக்க பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவு காண்கிறது. முதலீட்டாளர்கள் யாரும் ஸ்டார்ட்அப்பில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே,இவரே இன்னும் அதிகமாக முதலீடு செய்கிறார். ஒருகட்டத்தில் முதலீடு செய்தால் மட்டும் போதாது என்று தோன்றவே இவரே களத்தில் இறங்கி வேலை செய்கிறார். ஒவ்வொரு முறையும் முதலீடுகள் கரையும்; விற்பனை கூடும். ஆனால் லாபம் பெரிதாக வராது. இன்னும் முதலீடு தேவைப்பட இவரின் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்கிறார். சில சமயம் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டி இருந்தது. ஆனாலும் டோனி கொஞ்சமும் கவலைப் படவே இல்லை. பல சமயம் கடைநிலை வேலைகளை கூட தயக்கமில்லாது எடுத்து வேலை செய்தார்.
ஒரு சமயம் இவரது குடோனை லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு மாற்ற வேண்டி இருந்தது. டிரக் வண்டி ஓட்ட ஒரு ஆள் தேவைபட்டது. இவரே இறங்கினார். வாரவிடுமுறை முடிவதற்குள் இவர்களது பொருட்களை மாற்றியாக வேண்டும். அது சாதாரண பயணமில்லை 1500 மைல்கள். எங்கேயும் தங்காமல் ஒட்டி வந்தால் கூட 36 மணிநேரம் ஆகும். இவரது ஊழியரும் இவரும் மாறி மாறி ஓட்டிக்கொண்டே வருகிறார்கள். ஞாயிற்றுகிழமை மாலை இலக்கை அடைந்துவிட்டார்கள். பொருட்கள் சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்ப ஆரம்பித்தாகிவிட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்களது நிறுவனம் ஏர்போர்ட்டுக்கு அருகில் இருந்ததால் இன்னும் வேகமாக டெலிவரி செய்ய முடிந்தது. இப்போது மீண்டும் பொருளாதார நெருக்கடி. இப்போது ஒரு வங்கியை அணுகுகிறார்கள். அவர்களிடம் வருடாவருடம் இவர்களின் சேல்ஸ் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று காட்டினார்கள். ஆனாலும் லோன் கிடைக்க வாய்ப்பு குறைவாக இருந்தது. காரணம் Security காட்ட தேவையான சொத்துக்கள் எதுவும் இல்லை. பலகட்ட யோசனைகளுக்கு பிறகு வங்கி இவர்களுக்கு லோன் கொடுக்கிறது. மீண்டும் தப்பிக்கிறார்கள்.
முந்தைய ஸ்டார்ட்அப்பில் இருந்து கற்ற பாடத்தை இதில் முயற்சித்தார். வாடிக்கையாளர்களே முதன்மை என்று வாடிக்கையாளர் சேவை மையத்தை வேறு எங்கும் கொடுக்காமல் அவர்களே நடத்தினார்கள். இன்னும் மேலே யோசித்தார் டோனி. கம்பெனியில் உள்ள அனைவருமே Customer Care தான் என்று அறிவித்தார். அதாவது அதற்குத் தனித்துறை இருந்தாலும் எல்லோருமே Customer Care-ல் ஒரு பகுதியாக நினைக்கவேண்டும். அதனால் அவர்கள் நிறுவனத்தில் எந்தத் துறைக்கு வேலைக்கு எடுத்தாலும் முதலில் அவர்கள் Customer Care Department-ல் ஒருமாதம் வேலை செய்ய வேண்டும். இதில் விருப்பம் இல்லையென்றால் சம்பளத்தோடு $2000 போனஸுடன் வெளியில் செல்லலாம். அந்தளவுக்கு Customer Care என்பது அவர்களுக்கு முக்கியம்.
இதன் பலன் பலவாறாக அவர்களுக்கு கிடைத்தது. நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தது ஒரு பக்கம் என்றால் அவர்களே இவர்களின் Brand Ambassador ஆகவும் மாறி நிறைய புது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சர்பரைஸ் கொடுத்து அசத்தவேண்டும் என்று விரும்பினார்கள். தொலைதூர வாடிக்கையாளர்களை கூட ஆர்டர் செய்த 8 மணிநேரத்தில் கொண்டு சேர்க்க முயற்சித்தார்கள்.
Zappos நிறுவனத்திற்கு யார் வேண்டுமென்றாலும் Industry Visit செய்யலாம். முன்னமே பதிவு செய்துவிட்டால் அவர்களுக்கு அழைப்பு வரும். ஜாப்போஸ்ஸின் பல துறைகளில் ஏதேனும் ஒரு துறைக்கு அது ஒதுக்கப்பட்டிருக்கும். அவர்கள் விருந்தினர்களை அழைத்து சுற்றிக்காட்டுவார்கள். அதற்கு நடுவிலும் ஏதேனும் சர்ப்ரைஸ் காத்திருக்கும். இதுவும் ஜாப்போஸ் வெற்றிக்கு பெரியளவில் உதவுகிறது. விசிட் செய்தவர்கள் அதைப் பற்றி நிறைய எழுத அது பல பேரால் பகிரப்பட என்று Zappos பற்றி நிறைய ஆன்லைன் செய்திகள் (Contents) பெருகியது. கூகிளில் இவர்களது துறையை பற்றித் தேடினாலும் கம்பெனி கலாச்சாரத்தை பற்றித் தேடினாலும் ஜாப்போஸ் வந்துவிடுகிறது. எளிதாக சொல்வதென்றால் மக்களையே இலவச மக்கள் தொடர்பு அதிகாரிகளாக உருவாக்கிவிடுகிறார்கள்.
இப்போது Zappos ஒரு பயனர்களின் விருப்பமான பிராண்ட்டாக வளர, முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். கம்பெனி இன்னும் விரைவாக வளர்கிறது. வடஅமெரிக்கா முழுவதும் Zappos சேர்ந்துவிட்டது. ஒரு பில்லியன் டாலர்களுக்கு விற்பனையை எட்டுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்த அமேசான் இதைப் பார்க்கிறார்கள். Zappos-ஐ வாங்க பேரம் பேசுகிறார்கள். பல கட்டச் சுற்றுகளுக்கு பிறகு (இந்திய மதிப்பில்) 7200 கோடிகளுக்கு டீல் முடிகிறது.
இன்று Zappos அமேசானின் ஒரு கம்பெனி என்றாலும் தனித்தே இயங்குகிறது. காரணம் டோனி. ஜாப்போஸ்க்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது. அதன் பணியாளர்கள் ஒரு குடும்பம் போல இயங்குகிறார்கள். மிக அருமையான வாடிக்கையாளர் சேவையை கொடுக்கிறார்கள். இவையெல்லாம் அமேசானை விட ஒரு படி மேலே இருக்கிறது. ஜாப்போஸுடன் இணைந்த வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் எவருக்கும் அமேசானுடன் இணைவது உவப்பாக இல்லை. அச்சம் இருந்தது. அதைப் போக்க வேண்டியே ஜாப்போஸ் தனித்த நிறுவனமாக இயங்கியது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
என்ற குறளுக்கு அர்த்தம் தான் டோனி ஷெய். பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், டோனி பழகுவதற்கு மிக எளிய மனிதராகவே எல்லோராலும் பேசப்படுகிறார். அவர் எழுதிய புத்தகம் Delivering Happiness அதை பிரதிபலிப்பதாகவே உள்ளது. கடினமான வார்த்தைகள் கொண்ட அலங்கார மொழிநடை எதுவும் இல்லை. வாசகருடன் நேரடியாக பேசுவது போல மிக எளிமையாக இருக்கிறது.
ஸ்டார்ட்அப் பாடம்:
பணியாளர்களை, பொருட்களை உற்பத்தி செய்யும் தாயரிப்பாளர்களை, வாடிக்கையாளர்களை மனதில் வைத்து ஒவ்வொரு சிறு விசயத்திலும் மகிழ்ச்சிபடுத்தி, திருப்திபடுத்தி எளிமையாகவும், வெளிப்படையாகவும், நேரடியாகவும் செயல்படும் போது வெற்றி என்பது உடனடி லாபத்தை மட்டுமல்ல நீண்ட கால லாபத்தையும் உறுதி செய்கிறது.