

மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தலாம் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதை மட்டும் செய்து விடாதீர்கள் என உலகத் தங்க கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் சனிக்கிழமை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலைதான். இந்த நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு மட்டும் வெளியிட்டால், அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என World Gold Council கூறியுள்ளது.
World Gold கவுன்சிலின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய சச்சின் ஜெயின், மத்திய அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தி இருக்கிறார். ஒருவேளை, மத்திய அரசு தங்கத்தின் மீதான வரியை உயர்த்தினால், அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக தங்கக் கடத்தலுக்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அது தவிர, உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார். கடந்த ஜூலை மாதம், பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தார். இதனால், உள்நாட்டில் தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. ஆனால், சர்வதேச காரணிகள் காரணமாக, தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக அதிகரித்து விட்டது.
இருந்தாலும், இறக்குமதி வரி குறைந்ததன் காரணம், இந்தியாவில் தங்கம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைந்து வந்தன என கூறக்கூடிய சச்சின் ஜெயின், மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய ஜிடிபியில் தங்கம் சார்ந்த துறை 13% பங்களிப்பை தருகிறது. நாட்டில், சுமார் 20 முதல் 30 லட்சம் பேர் தங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை மாதம் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15% இருந்து 6% ஆக குறைத்தார்.
இதனால், நாட்டில் முறைக்கேடாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்படும் என்றும், உள்நாட்டில் மக்கள் தங்கம் வாங்கும் போக்கு அதிகரிக்கும் என்றும் உலகத் தங்க கவுன்சில் கூறுகிறது. இருந்தாலும், மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக தங்கத்தின் விலையை குறைத்ததோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
எனவே, அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தினால், உள்நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும்.