

உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நேற்று Switzerland Davos நகரில் நடைபெற்றது. இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக பெரும் பணக்காரர்கள் பில்லியனர்கள் இருக்கின்றனர். இனி வரும் நாட்களில் எப்படியெல்லாம் லாபம் சம்பாதிக்கலாம் என பணக்காரர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், இந்த மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Oliver Wyman உடன் சேர்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், உலகம் முன்பு இருந்ததை விடவும் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு எனில் ரூ.51 லட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 லட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம். உலக நாடுகளின் GDP-ல் இந்த பணம் 5% ஆகும்.
மேலும் இந்த அறிக்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் 2008ஆம் ஆண்டின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை விடவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் இதை சமாளித்துக்கொள்ள முடியும். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இதை தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்தியா மட்டும் இல்லாமல் பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாடுகளில் GDP 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவை அனைத்தும் ‘அணிசேரா’ நாடுகளாக மாறும், இதனால் ரஷ்யாவிடமும் உதவி வாங்கி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை உருவாகும். ஆனால், நெருக்கடியான காலத்தில், இந்த நாடுகள் எந்த பக்கமும் நிற்காமல், ஒரு பெரிய நாட்டின் பக்கம் சார்ந்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த சூழல் இன்னும் மோசமடையும் பட்சத்தில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களே பெரிதும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.