சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டார்ட்அப் என்ற சொல் வண்டி கிளம்ப மக்கர் பண்ணினால் “ஸ்டார்ட்அப் ப்ராப்ளம்பா கொஞ்சம் என்னவென்று பாருங்க” என்று குறிப்பிடும் சொல்லாக தான் இருக்கும்.
அது தான் 21-ஆம் நூற்றாண்டின் புதுயுக சொல். மத்திய,மாநில அரசுகளும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை சரிகட்ட இந்த சொல்லை தான் தீர்வாக முன்வைக்கிறார்கள். உங்களிடம் ஒரு சிறப்பான தொழில் ஐடியா இருக்கிறது. அதை செயல்படுத்த ஒரு நிறுவனத்தை தொடங்குகிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்ற நினைப்பீர்கள். அதற்காக உருவாக்கிய அந்த புது நிறுவனம் தான் ஸ்டார்ட்அப்.
ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அவரது பிசினஸ் ஐடியா என்பது குழந்தைபோல. அதைச் சரியாக உருவாக்கி, நுகர்வோரிடம் கொண்டுசென்று ஒரு முழுமையான வியாபாரம் ஆக்கும் வரை பிரசவ வேதனைதான். அந்த வகையில் பிசினஸ் மாடல் என்பது பிறந்த குழந்தை என்றால்… ஸ்டார்ட்அப் என்பது வயிற்றில் சுமக்கும் சிசு.
முன்பெல்லாம் ஒருவரின் தொழில் யோசனை நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் ஒரு பெரிய முதலீடு வேண்டும். இடம், ஆள் பலம் என்று பல அடிப்படை விஷயங்கள் வேண்டும். ஆனால் இன்று கணினியும், இணையமும் வந்த பிறகு அறிவை மட்டுமே முதலீடாக கொண்டு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பெனியையும் ஆரம்பித்துவிடலாம். எளிய மற்றும் கவர்ச்சிகரமான உதாரணம் Facebook மற்றும் Mark Zuckerberg. இவரை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். அதற்கு முன்பு நம்ம ஊர் ஸ்டார்ட்அப் ஜாம்பவான் ஒருவரைப் பற்றி பார்த்துவிடலாம்.
என்னை ஈர்த்த முதல் ஸ்டார்ட்அப் ஜாம்பவான் சபீர் பாட்டியா. என்னை மட்டுமல்ல உலகையே ஈர்த்த, உலகின் பெரிய பணக்காரரான பில்கேட்ஸை ஈர்த்தவர் அவர். அவர் செய்ததெல்லாம் ஈமெயில் சேவையை முற்றிலும் இலவசமாக உலகிற்கு திறந்துவிட்டது தான். அதுதான் hotmail. அதன்பின்பு பிறந்தவை தான் yahoomail, gmail எல்லாம். இன்றைய டீன்-ஏஜ் மக்கள் பிறப்பதற்கு முன்பே இது உருவாகி 2000 கோடிகளுக்கு அன்றே கைமாறியும் விட்டது.
சபீர் பாட்டியா சண்டிகரில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர். மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்று Califorinia institute of technology இல் B.S படித்தார். பிறகு, புகழ்பெற்ற Standford பல்கலைகழகத்தில் MS Electrical Engineering படித்து முடிக்கிறார். முடித்தவுடன் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் Hardware Engineer ஆக வேலைக்கு சேர்கிறார்.
ஒருநாள் தன்னுடன் பணிபுரிந்த நண்பருக்கு மெயில் அனுப்ப முயற்சிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் Firewall அதை தடுத்துவிடுகிறது. தடைக்கல் படிக்கல்லாக தெரிய அன்று தான் அவருக்கு Hotmail பிறக்க ஐடியா தோன்றுகிறது. தன் நண்பர் ஜாக் ஸ்மித்துடன் இணைந்து பொதுமக்கள் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஹாட்மெயில்லை உருவாக்குகிறார்.
இதில் என்ன புதுமை எனக் கேட்கிறீர்களா? அதற்கு முன்புவரை ஈமெயில் ஒரு பெருமித அடையாளமாக குறைவான நபர்களிடம் மட்டுமே புழங்கியது. அன்றைய காலகட்டத்தில் ஒரு ஈமெயில் ஐடியை பெற நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலைபார்க்க வேண்டும் அல்லது ஈமெயில் ஐடியை விலை கொடுத்து வாங்கவேண்டும். இந்த சூழ்நிலையில் தான் ஹாட்மெயில் இலவச ஈமெயில் சேவையை வழங்கியது.
இவர்களை போல சில நிறுவனங்கள் இலவச ஈமெயில் ஐடி கொடுத்து வந்தன. ஆனால் அவை பயன்பாட்டிற்கு எளிதாகவோ, முழுமையாக இலவசமாகவோ இல்லை. இது தான் ஒரு தொழில்முனைவோர் கண்டறிய வேண்டிய வெற்றிக்கான இடைவெளி. இந்த கேப்பில் புகுந்து வெளியில் வந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
இணையம் வணிக பயன்பாட்டில் இருந்து பொதுமக்களுக்கு நகர்ந்த காலகட்டம் அது. அதை சரியாக பயன்படுத்தி ஹாட்மெயில் பலகோடி மக்களிடம் சென்று சேர்ந்தது. Internet cafe என்ற பெயரில் பல Browsing சென்டர்கள் உலகமெங்கும் பிறந்தது. ஒரு கடிதம் ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று சேர பல நாட்கள் எடுத்துக்கொண்ட காலம். பண்டிகைக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினால் அந்த பண்டிகை முடிந்தபிறகே கிடைக்கும். செல்போன் ரொம்பவும் விலை உயர்ந்த பொருள். Incoming-க்கு கூட ஒரு நிமிடத்திற்கு 10ரூபாய் கொடுக்க வேண்டும். அப்போது 1996-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்ப பலரும் ஹாட்மெயிலில் கணக்கை தொடங்கினார்கள். உறவினர்களை நண்பர்களை தொடங்க வைத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.
அப்போது Windows-95 OS வெளிவந்து பில்கேட்ஸ் பில்லியனராக வளர்ந்து கொண்டிருந்த காலம். மைக்ரோசாப்ட் இணைய உலகிற்கு வர துடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் முன்னே பல ஸ்டார்ட்அப் கம்பெனிகள் Yahoo, AOL, Hotmail என்று கண்ணை உறுத்திக் கொண்டிருந்தார்கள். Hotmail அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக தென்பட்டது. காரணம், அது மக்களின் பெயர், இடம், முகவரி உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களை எளிதாக பெற வழி செய்தது. மிக எளிதான மார்கெட்டிங் வழி.
மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரையும் இணைத்திருந்தது. இதைவிட நல்ல வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுமா? சபீர் பாட்டியாவிடம் பேரம் தொடங்கியது. 400 Million அமெரிக்கடாலருக்கு வாங்கினார்கள். கூடவே அவரை அந்த தளத்தின் தலைவராகவும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.
தொழில்முனையும் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் கவனம் இப்படியாக இணையத்தின் பக்கம் திரும்ப தொடங்கியது.
ஸ்டார்ட்அப் பாடம் :
தொழில்துறையில் ஒரு பிரச்சனை என்பது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. எல்லோரும் சந்திக்கும் ஒரு பிரச்னையை கண்டுபிடியுங்கள். அதற்கு ஒரு தீர்வை கண்டுபிடியுங்கள். எளிய முறையில் செயல்படுத்த முயற்சியுங்கள். அந்த நொடி புதுயுகத்தின் கதாநாயகன் பிறந்துவிட்டான்.