
மிரட்டலான ஸ்டார்ட்-அப் கதை என்றால் அது DELL நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல்லின் கதை தான். ஒரு பிசினஸில் நுழைவதற்கு உயர்நிலை பள்ளியில் படித்த சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தேர்வில் எழுதி வென்ற சான்றிதழ் வேண்டும். அதற்காக விண்ணப்பிக்கிறார். அப்போது அவரின் வயது வெறும் எட்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படிதான் நடந்திருக்கிறது.
பத்துவயதிற்கு பிறகு அவரது பள்ளிப்படிப்பு அத்தனையும் அவரது வருமானத்தில் செல்கிறது. அதற்காக அவர் செய்யாத வேலை இல்லை. பன்னிரெண்டு வயதில் ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலைக்கு செல்கிறார். அவரது துறுதுறுப்பும் திறனும் அவரை அந்த வயதிலேயே சூப்பர்வைசராக அந்த உணவகத்தில் உயர்த்துகிறது. அடுத்து ஹோஸ்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு சந்தா பிடித்து தரும் வேலைக்கு செல்கிறார். அப்போது ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார். சந்தா வாங்குபவர்களில் பெரும்பாலோர் சொந்த வீடு வாங்க, நிரந்தமான வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள். நண்பர்கள் சிலரை வேலைக்கு எடுத்து உள்ளூர் நீதிமன்றத்தில், நகரசபையில் உள்ள சில டேட்டாக்களை பெறுகிறார். அவை கடன் வாங்க சான்றிதழ் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆனவர்களின் பட்டியலை தேடுகிறார். அந்தப் பட்டியலில் இருந்து வசதி படைத்தவர்களின் முகவரியை, தொலைபேசி எண்களை தனியே எடுத்து முயற்சிக்கிறார். நன்றாக பலன் தருகிறது. அதன்மூலம் ஆண்டுக்கு 18000 டாலர்களை சம்பாதிக்கிறார். இது அவரது ஆசிரியர்களின் ஆண்டு வருமானத்தை விட அதிகம்.
கிடைத்தப் பணத்தில் சேமித்து பங்குச் சந்தையிலும், கமாடிட்டி சந்தையிலும் முதலீடு செய்து முயற்சித்து பார்கிறார். யானைப் பசிக்கு சோளப்பொறி எப்படி பத்தும்? ஆகவே வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ள யோசிக்கிறார். அவருக்கு பள்ளிப் பருவத்தில் ஏதாவது ஒரு கிளப்பில் சேர வேண்டும் என்றபோது அவர் தேர்ந்தெடுத்தது எண்கள் அறிவு கிளப். கணிதத்தின் மீதிருந்த இயல்பான காதல் அதைத் தேர்ந்தெடுக்க உதவியது. அப்படிதான் அவர் கணினி உலகத்திற்குள் வருகிறார்.
தான் சேமித்த பணத்தில் முதலில் ஒரு கால்குலேட்டர் வாங்கி நோண்டி பார்க்கிறார். பசி அடங்கவில்லை. கணினி விற்கும் கடைக்கு செல்கிறார். சிறிது விளையாடி பார்க்கிறார். விட்டுச்செல்ல மனசே வரவில்லை. கையிலிருந்த சேமிப்பை எல்லாம் கொட்டி ஆப்பிள்-2 கம்ப்யூட்டரை வாங்குகிறார். வீட்டிற்கு வந்ததும் அதன் மென்பொருள்கள் எல்லாத்தையும் இயக்கி பார்த்தாயிற்று. தேடலின் பசி தீரவில்லை. கம்ப்யூட்டரை பார்ட் பார்ட்டாக பிரித்து மீண்டும் அசெம்பிள் செய்கிறார். இப்போதுதான் பசி கொஞ்சம் அடங்குகிறது. இப்போது அவருக்கு கணினியில் வன்பொருள், மென்பொருள் என்ற பாகுபாடில்லாமல் எல்லாம் அத்துபிடி. டெக்னாலஜியில் அவருக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம் என்பதால் தான் பின்னாளில் CEO பதவியை கூட இன்னொருவருக்கு கொடுத்துவிட்டு CTO (Chief Technology Officer) என்ற தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவியை வகிக்கிறார்.
டெக்சாஸ் பல்கலைகழகத்தில் படிக்கும்போது உடன் படிக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு கணினி பாகங்களை வாங்கி அசெம்பிள் செய்து விற்கிறார். அது நல்ல லாபம் தரவே கடை வைப்பதற்கான லைசன்ஸ்க்கு விண்ணப்பிக்கிறார். அப்போது அவரிடம் கடையே இல்லை. விடுதி அறையில் இருந்து தான் பிசினஸ் செய்கிறார். விற்பனைக் கணக்குகளை சரியாக காட்டவே அவருக்கு லைசன்ஸ் கிடைக்கிறது. அப்போது அவரின் வயது வெறும் 19 மட்டுமே. படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுநேர தொழில்முனைவோர் ஆகிறார்.
PC’s Limited என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்தக் கடையில் கணினிகளை வாங்க, மென்பொருள் வாங்க, தரம் உயர்த்திக்கொள்ள, பழுது பார்க்க என்று கணினி சார்ந்த எல்லாவித சேவைகளும் கொடுக்கப்பட்டது. மாதம் 50,000 டாலர்களுக்கு விற்பனை சூடு பிடித்தது. கம்ப்யூட்டரை விற்கும் கடை அதைத் தயாரிக்கும் புதிய நிறுவனமாக டெல் கம்ப்யூட்டர் கார்பொரேசன் என்ற பெயரில் பரிணமிக்கிறது. மூன்று பேருடன் ஆரம்பித்த அந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பத்து மடங்கு வளர்ச்சி காண்கிறது. இன்டெல், மைக்ரோசாப்ட்டுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நிறைய விண்டோஸ் வகை கணினிகளை தயாரிக்கிறார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஐபிஎம் கணினி விற்பனையில் முன்னணி வகிக்கிறது. இன்னொரு புறம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையும் சூடு பிடிக்கிறது. இந்த ஜாம்பவான்களுக்கு நடுவில் மைக்கேல் டெல் என்ற அந்த இளைஞன் தன் நிறுவனத்தின் தரமான கணினி தயாரிப்பினாலும், சிறந்த வாடிக்கையாளர் சேவையாலும் முன்னேறுகிறார் எனும்போது உலகம் கொஞ்சம் இவரை உற்றுப்பார்க்கிறது. முதலீடு வேண்டுமா என்று கேட்கிறது. இவர் உடனடியாக எந்த முதலீடையும் பெற முயற்சிக்கவில்லை. தன் கைப்பொருளை வைத்து தொழில் செய்வது குன்றேறி யானைப்போரை காண்பது போல பாதுகாப்பானது என்று வள்ளுவர் சொல்வார். அதை உறுதி செய்தவர் டெல்.
இருபத்தேழு வயதில் உலகின் 500 முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக தனது நிறுவனத்தை கொண்டுவந்த அவரது அசாத்திய திறனை கண்டு உலகம் மிரளவே செய்தது. 1992-இல் இது மிகப்பெரும் சாதனை. அன்றைய தேதியில் மிக இளவயது தலைமைசெயல் அதிகாரி (CEO) இவரே. இந்த சாதனையை இருபது வருடங்களுக்கு பிறகு தான் மார்க் சூக்கர்பெர்க் உடைக்கிறார்.
2001 ஆரம்பத்திலேயே உலகில் அதிக கணினியை விற்கும் பெரிய நிறுவனமாக டெல் வளர்ந்துவிட்டது. அப்போது உலக கணினி சந்தையில் 12.8 சதவீத கணினி உற்பத்தியை டெல் மட்டுமே செய்கிறது. IBM, Campaq, HP, Apple போன்ற ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை செய்தது. இன்றுவரை இதை தக்க வைத்திருக்கிறார்கள்.
இன்று டெல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டுமே ஏழு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல். மைக்கேல் டெல்லின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஒரு லட்சத்தி முப்பதாயிரம் கோடி ரூபாய்கள். ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்துக்கொண்டே படித்து வந்த ஒரு சிறுவன் தனது அயராத உழைப்பாலும் தொழில் வேட்கையாலும் இன்று உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் என்றால் மிரட்டல் தானே.
ஸ்டார்ட்அப் பாடம்:
ஒரு ஸ்டார்ட்அப்பின் வெற்றிக்கு உழைப்பு, திறன், அறிவு எல்லாம் அடிப்படை தேவை. அதனினும் ஒரு அடிப்படை தேவை அசராத நம்பிக்கை. புற உலகின் அழுத்தங்களை மனதில் ஏற்றாமல் ”இதுவல்ல என் இடம். அது உயரத்தில் இருக்கிறது. அதை நோக்கி நான் பயணித்துக்கொண்டே இருப்பேன்” என நம்ப வேண்டும். அந்த அசராத நம்பிக்கையின் உறுதிக்கேற்ப தான் ஒரு மனிதனின் வளர்ச்சி இருக்கும். வள்ளுவர் சொல்வாரே…
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு.
தண்ணீர் என்ற நம்பிக்கையின் உயரத்திற்கு ஏற்ப தான் தாமரை என்ற செல்வத்தின் வளர்ச்சி இருக்குமாம். அது 100 சதவீதம் உண்மை.