Unified Payment Interface- பொதுவாக அதன் சுருக்கமான ‘UPI’ மூலம் அறியப்படுகிறது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான கட்டண முறைகளில் ஒன்று. இதன் பயன்பாட்டின் எளிமை மற்றும் பாதுகாப்பான தளம் போன்றவை பயனர்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது. நிதியை தொந்தரவு இல்லாமல் பரிவர்த்தனை செய்ய பல UPI ஆப்ஸ் (App) உள்ளன.
UPI கட்டண முறையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அதை உங்கள் மொபைல் ஃபோன் மூலம் இயக்க முடியும், எனவே உங்கள் பணத்தை உங்கள் பாக்கெட்டுகளில் எடுத்துச் செல்லலாம். இருப்பினும், அதன் சில முக்கியமான அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்வது உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும். UPI பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 தகவல்கள்.
1. UPI ID-யைச் சரிபார்த்தல்:
பணத்தைப் பரிமாற்றம் செய்ய UPI-ஐப் பயன்படுத்தும்போது, பெறுநரின் பெயர், UPI ID மற்றும் நீங்கள் மாற்ற விரும்பும் தொகை ஆகியவற்றைக் காட்டும் உறுதிப்படுத்தல் பக்கம் UPI பயன்பாட்டில் காட்டப்படும். நீங்கள் விவரங்களை மிகவும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும், உறுதியாக தெரியவில்லை என்றால், ஐடி சரியாக உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க ரூ. 1 அல்லது ரூ. 2 போன்ற மிகச் சிறிய தொகையை மாற்றலாம்.
சமீபத்தில் ஒரு ஸ்பா மேலாளர் தனது சொந்த QR குறியீட்டை அவுட்லெட் QR உடன் மாற்றியமைத்து தனது தனிப்பட்ட கணக்கில் லட்சக்கணக்கான பணத்தைப் பெற்ற ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. எனவே, உங்கள் கடை அல்லது நிறுவனத்தில் பணத்தைப் பெற UPI QR குறியீட்டைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர் சரியான QR குறியீட்டின் மூலம் பணம் செலுத்துகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. அறியப்படாத கட்டணக் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்:
மற்றவரிடமிருந்து கட்டணத்தைக் கோர UPI-ஐப் பயன்படுத்தலாம். நீங்கள் மற்ற UPI பயனர்களுக்கு கட்டணக் கோரிக்கையை அனுப்பலாம். UPI பேமெண்ட் கோரிக்கையைப் பெற்றவர், கட்டணத்தை மாற்றுவதற்கான கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.
3. பரிவர்த்தனை வரம்பு:
நபருக்கு-நபர் (P2P) பரிமாற்றங்களுக்கு UPI ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. அதேசமயம் கிரெடிட் கார்டு செலுத்துதல், பங்குச் சந்தைப் பணம் போன்ற சில நபர்-வணிகர் (P2M) பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 லட்சம் வரை அனுமதிக்கிறது. மேலும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 UPI பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பரிவர்த்தனை வரம்பை நீங்கள் முடித்துவிட்டால், அடுத்த பரிவர்த்தனை செய்ய 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும். இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட வரம்புகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம், எனவே உங்கள் வங்கியிலிருந்து சரியான வரம்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
4. UPI மூலம் வணிக பணம் ( Merchant Payment) செலுத்துவதற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவும்:
வணிக பணம் செலுத்துவதற்கு, உங்கள் RUPAY கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி UPI இயங்குதளம் மூலம் பணம் செலுத்தலாம். பரிவர்த்தனை செய்வதற்கு முன் உங்களின் தற்போதைய RUPAY கிரெடிட் கார்டை உங்கள் UPI இயங்குதளத்துடன் இணைக்க வேண்டும். வணிகர் கட்டணத்தைச் செய்ய UPI பயன்பாட்டைப் பயன்படுத்தும்போது, இறுதிக் கட்டணத்தைச் செலுத்த உங்கள் வங்கி மற்றும் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம். P2P பரிமாற்றம் அல்லது சிறிய வணிகர்களுக்கு UPI மூலம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த முடியாது என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியம்.
5. தோல்வியடைந்த பரிவர்த்தனை மற்றும் டெபிட் செய்யப்பட்ட தொகை:
எந்த ஒரு மென்பொருளையோ அல்லது அப்ளிகேஷனையோ பயன்படுத்தும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. UPI இயங்குதளத்தைப் பயன்படுத்தும் போது சில சமயங்களில் உங்கள் கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்பட்டாலும் பெறுநரின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். இது போன்ற சமயங்களில் வழக்கமாக, பணம் உடனடியாகத் திரும்பப் பெறப்படும், ஆனால் சில சந்தர்ப்பங்களில் 3 முதல் 5 வேலை நாட்கள் வரை ஆகலாம். இருப்பினும், விரைவான தீர்வுக்காக உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையில் புகார் செய்யலாம். பரிவர்த்தனை செய்வதற்கு முன், உங்கள் மொபைல் இணையம் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியுற்ற பரிவர்த்தனைகளின் வாய்ப்புகளைக் குறைக்க, பெரிய பரிவர்த்தனையைச் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சிறிய பரிவர்த்தனையைச் செய்யலாம்.
UPI வசதியைப் பயன்படுத்தும் போது, உங்களுக்குத் தெரியாத யாருடனும் உங்கள் PIN-ஐ பகிர வேண்டாம். UPI பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு எப்போதும் நம்பகமான வைஃபை நெட்வொர்க் அல்லது உங்கள் தனிப்பட்ட இணையத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.