பலரும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால், அந்த சூழ்நிலையை சமாளிக்க “ஹெல்த் இன்சூரன்ஸ்” (Health Insurance) எடுத்து வைத்திருப்பார்கள். ஆனால் தேவைப்படும் நேரங்களில் Health insurance கிளைம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்தாலும் ,அது உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், இன்சூரன்ஸ் எடுத்தவருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் எதற்காக (Health Insurance) ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் மறுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிளைம் செயல்முறையில் பிழை இருத்தல்: ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் செயல் முறையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் பிழையிருந்தால், உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
முழுமையற்ற படிவங்கள்: தேவையான அனைத்து படிவங்களையும் துல்லியமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விடுபட்ட தகவல் அல்லது முழுமை அடையாத விவரங்கள் உங்களின் கோரிக்கை நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.
ஆவணங்கள்: தேவையான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். தாமதமான அல்லது காணாமல் போன ஆவணங்களும், உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட காரணமாக இருக்கலாம்.
காலக்கெடு: இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறைக்கான காலக்கெடுவை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அந்த தேதியை விட்டு தாமதமாக கிளைம் பெற விண்ணப்பித்தாலும், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கவரேஜைப் புரிந்து கொள்ளுதல்: சில பாலிசிகள் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு பயன்படுவதில்லை. எனவே, உங்களுடைய பாலிசியின் கவரேஜ் என்ன? என்பதை முன்னரே புரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் கிளைம் பெற விண்ணப்பிக்கும் போது அவை நிராகரிக்கப்படாமல் இருக்கும்.
நிபந்தனைகளை புரிந்து கொள்வது: ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும்போது ஏற்கனவே இருக்கும் நோய்களை நேர்மையாக தெரிவிக்க வேண்டும். அவற்றை மறைப்பதும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட வழிவகுக்கும்.
எக்ஸ்பைரி டேட்: உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும். பொதுவாக ஒரு வருட கால அவகாசத்தை பல காப்பீட்டு நிறுவனங்களும் வழங்குகின்றன. உங்கள் பாலிசி காலாவதியானால், அது பயனற்றதாகிவிடும். முன்னதாகவே புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு உங்களுடைய பாலிசியின் காலாவதி தேதியை கண்காணிக்க வேண்டும். உங்கள் பாலிசி காலாவதியான பிறகு விண்ணப்பம் வைத்தால், அப்போது அவை நிராகரிக்கப்படலாம்.
உங்கள் கிளைம் செயல்முறை மறுக்கப்படுவதற்கான பொதுவான காரணங்களை அறிந்திருப்பதும், அவற்றைத் தவிர்க்க நடவடிக்கை எடுப்பதும், உங்கள் கிளைம் செயல்முறை சீராக நடைபெற உதவும். பாலிசிதாரர்கள் உங்களுடைய கவரேஜைப் புரிந்து கொண்டு காப்பீட்டு பலன்களை அதிகரிக்க, காப்பீடு வழங்குநர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை தெரிந்து கொண்டு அதன்பின் பாலிசி எடுப்பது நாம் அனைவருக்கும் நல்லது.