மியூச்சுவல் ஃபண்டிலும் எஸ்ஐபி முதலீடு எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமானதாக இருக்கிறது.
ஒரு முதலீட்டாளர் எப்படி எஸ்ஐபி(SIP) குறித்து தெரிந்து வைத்திருக்கிறாரோ அதே போல எஸ்டபிள்யூபி எனப்படும் சிஸ்டமேட்டிக் வித்டிராவல் திட்டம்(SWP) குறித்தும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
எஸ்ஐபி(SIP) என்றால் என்ன?
எஸ்ஐபி என்பது குறிப்பிட்ட இடைவெளியில் பணத்தை முதலீடு செய்வது.மாதந்தோறும், நாள்தோறும், வாரந்தோறும், காலாண்டு தோறும் என வைத்துக் கொள்ளலாம். இந்த முறையில் முதலீடு செய்யும் போது ஒரு ஃபண்டின் நிகர சொத்து மதிப்பை யூனிட்களாக பணம் கொடுத்து வாங்குகிறோம்.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்த மதிப்பு மாறுகிறது. சந்தை சரிவில் இருக்கும் போது அதிக என்ஏவிக்களை வாங்கலாம், சந்தை உச்சத்தில் இருக்கும் போது குறைந்த யூனிட்களை வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100இல் இருந்து எஸ்ஐபி முதலீட்டை தொடங்கலாம். காம்பவுண்டிங் முறையில் நீண்ட காலம் செய்யும் முதலீடு உங்களுக்கு பெரிய லாபத்தை தருகிறது. உதாரணத்திற்கு மாதத்திற்கு ரூ.10,000 என முதலீடு செய்தால் 12% லாபத்தில், 10 வருடத்தில் உங்களுக்கு 23.20 லட்சமாக கிடைக்கும். அதுவே மேலும் 10 வருடங்களுக்கு வைத்துக் கொண்டால் 1 கோடி ரூபாயை ஈட்டலாம்.
எஸ்டபள்யூபி(SWP)என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் பணத்தை குறிப்பிட்ட இடைவெளியில் திரும்ப பெறுவது தான் சிஸ்டமேட்டிக் வித்டிராவல் திட்டம். உங்களுக்கு தேவையான இடைவெளிகளை முடிவு செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும் தேதியில் ஃபண்டின் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உங்களுக்கு பணம் வழங்கப்படும். இது மாதாந்திர வருமானமாக கூட உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு பெறும் டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. கேபிடல் கெயின் டேக்ஸ் மட்டும் செலுத்த வேண்டி இருக்கும். உதாரணமாக மாதம் ரூ.5,000 திரும்ப பெற, உங்களின் என்ஏவி மதிப்பு ரூ.100 என வைத்துக் கொண்டால், 50 யூனிட்களை விற்பனை செய்தால் போதும். அதுவே மதிப்பு குறைந்து ரூ.95 என வந்தால் 52.63 யூனிட்களை விற்பனை செய்ய வேண்டியிருக்கும்.
சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது உங்களின் ஃபண்டின் மதிப்பும் உயரும். இந்த மாதம் உங்களின் ஃபண்டின் ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.100 என்றால் உங்களிடம் 100 யூனிட்கள் இருந்தால் அதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். அதுவே அடுத்த மாதம் ரூ.90 என மதிப்பு குறைந்தால், உங்களிடம் இருக்கும் யூனிட்டின் மதிப்பு ரூ.9,000 என குறையும். ஒரு வேளை ரூ.105 என ஒரு யூனிட்டின் மதிப்பு அதிகரித்தால், உங்களிடம் உள்ள மொத்த யூனிட்களின் மதிப்பு ரூ.10,500 ஆகும். சிஸ்டமேட்டிக் வித்டிராவல் திட்டம் மூலம் குறிப்பிட்ட யூனிட்களை மட்டுமே விற்பனை செய்வதால் உங்களுக்கு சந்தை ஏற்றங்களுக்கு ஏற்ப லாபமானது நீடித்து கொண்டே இருக்கும்.