Health insurance : இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் இல்லாத மருத்துவமனையில் கூட உங்களால் பணமில்லா சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும்.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட விதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் இல்லாத மருத்துவமனையில் கூட உங்களால் பணமில்லா சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரம் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் கிளைம்களை விரைவாக ப்ராசஸ் செய்யலாம்.
டயாபடீஸ், ஹைப்பர் டென்ஷன் அல்லது பிற நாள்பட்ட நோய்கள் போன்ற ஏற்கனவே உங்களுக்கு இருக்கக்கூடிய உடல்நல பிரச்சனைகளுக்கான காத்திருப்பு காலம் தற்போது 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மருத்துவமனையில் ஒருமுறை அனுமதிக்கப்பட்டதற்கு பல்வேறு ஹெல்த் பாலிசிகளின் பலன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது உங்களிடம் பல ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் இருந்தால் ஒரே ஒரு மருத்துவமனை பில்லை அடைப்பதற்கு அவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணமாக உங்களிடம் 5 லட்ச ரூபாய் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 பாலிசிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களுடைய மருத்துவமனை பில் 12 லட்சம் ரூபாய் என்றால் இந்த இரண்டு பாலிசிகளையும் இணைத்து பணத்தை அடைப்பதற்கு கிளைம் செய்யலாம். இந்த பாலிசி மாற்றங்கள் மூலமாக பாலிசி ஹோல்டர்களுக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்த பலன்களை எப்படி பெறுவது என்பதற்கான விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய பாலிசியை புரிந்து கொள்ளுதல்:
முதலில் உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை சரிபார்த்து அதில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு சில பாலிசிகளில் இந்த பலன்களை பெறுவதற்கு நீங்கள் அப்கிரேட் அல்லது அட்ஜஸ்ட்மென்ட்களை செய்ய வேண்டியிருக்கலாம்.
முன்கூட்டிய அங்கீகரிப்பு செயல்முறை:
நெட்வொர்க் அல்லாத ஹாஸ்பிட்டல்களில் பணமில்லா சிகிச்சை பெறுவதற்கு நீங்கள் முன்கூட்டிய அங்கீகரிப்பை பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயோ அல்லது அதற்கு முன்னரோ நீங்கள் இது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுடைய சிகிச்சை திட்டம் மற்றும் ஆகக்கூடிய செலவை ஆய்வு செய்யும்.
டாக்குமென்ட்களை சமர்ப்பித்தல்:
இன்சூரன்ஸ் பாலிசி கிளைம் செயல்முறை சுமுகமாக நடைபெற உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் அட்டை அல்லது பாலிசி விவரங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது தவிர ஆதார், PAN கார்டு, மருத்துவ அறிக்கைகள், ரசீதுகள், மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
அவசர கால சூழ்நிலை:
அவசரகால சூழ்நிலையின்போது ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சிகிச்சை பெற்ற பிறகு அங்கீகரிப்பை வழங்குகின்றன. இதன் மூலமாக நீங்கள் உடனடி சிகிச்சையை பெறலாம் மற்றும் அதற்கான அங்கீகரிப்பை பின்னர் பெற்றுக் கொள்ளலாம். இந்த பலனை பெறுவதற்கு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக அது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய விதிகளை நன்றாக புரிந்து கொள்வதன் மூலமாக அவசரகால சூழ்நிலைகளின்போது எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல், இலவச மருத்துவ பராமரிப்பு, விரைவான கிளைம் செயல்முறை மற்றும் சிறந்த பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை நீங்கள் பெறலாம். அவ்வப்போது உங்களுடைய பாலிசியை ஆய்வு செய்வது மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் விதிமுறைகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அதன் மூலமாக உங்களுக்கு முழு பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.