
தற்போது நாம் அனைவரும் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் பற்றி அறிந்து வைத்துள்ளோம். இருப்பினும் நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது சில தவறுகளை செய்துவிடுகிறோம். இதனால் மருத்துவ சிகிச்சையின்போது நமது கையில் இருந்து பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்நிலையில் தான் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது முக்கியமாக இந்த 5 விஷயங்களை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் நலப்பிரச்சனைகள் இன்றி வாழ்ந்தாலே பெரும் பாக்கியம். ஏனென்றால் காய்ச்சல், தலைவலி பாதிப்பு என்பது உடனே குணமாகிவிடும். அதோடு அதிக பணமும் செலவழித்து மருத்துவம் பார்க்க வேண்டியது இல்லை.
மாறாக உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது சிக்கலை ஏற்படுத்தி விடும். நோய் பாதித்தவர் மட்டுமின்றி அவரை நினைத்து ஒட்டுமொத்த குடும்பமும் கவலை கொள்வதோடு, பல லட்சங்களை செலவழித்து மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஒவ்வொருவரும் தங்களின் உடல்நலனை கவனமாக பராமரித்து கொள்ள வேண்டும். அதோடு உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவற்றை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவது நல்லது. சரி இதனை செய்துவிட்டால் மட்டும் மருத்துவ பிரச்சனை இல்லாமல் போய்விடுமா? என்றால் அதற்கான பதில் ‛இல்லை’ என்பது தான். ஏனென்றால் நோய்களை தவிர்த்து விபத்து, திடீரென தவறி கீழே விழுந்து படுகாயமடைவது உள்ளிட்டவை மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். இத்தகைய மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்வது தான் இன்சூரன்ஸ் எனும் காப்பீட்டு திட்டம். இந்தியாவில் தற்போது ஏராளமான காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நாம் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் தேவையான இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். மாதம் மாதம் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை, இல்லாவிட்டால் ஆண்டுக்கு ஒருமுறை என நாம் இன்சூரன்ஸ் பிரிமீயம் தொகையையும் முறையாக செலுத்தினால் அந்த திட்டத்தின் பலன்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு மருத்துவமனைகளில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
5 விஷயம் முக்கியம்: இதன்மூலம் மருத்துவம் சார்ந்த அவசர காலத்துக்கு இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தி மருத்துவமனையில் தரமான சிகிச்சைகளை பெற்று கொள்ள முடியும். இதனால் தான் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் பாலிசி என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இதனை அறிந்து தான் பல நிறுவனங்கள் தற்போது தங்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. இருப்பினும் பலருக்கும் எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்வது, எந்த வகையான பாலிசியை எடுப்பது என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்சூரன்ஸ் எடுக்க விரும்புவோர் நிச்சயமாக இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதல் விஷயம்: இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது அதற்கு கிடைக்கும் மருத்துவ பலன்கள் பற்றி முதலில் நன்றாக ஏஜென்டிடம் கேட்க வேண்டும். உங்களுக்கு புரியாமல் இருந்தால் அதுபற்றிய விபரங்களை புரியும் வகையில் விளக்கி கூற கேட்க வேண்டும். இதில் கூச்சப்படக்கூடாது. அதோடு நாம் கட்டும் ஒவ்வொரு தவணை தொகை எவ்வளவு? பாலிசியின் மொத்த மதிப்பு எவ்வளவு? எந்த வகையான சிகிச்சைகளை பெற முடியும்? பாலிசியை பயன்படுத்த விரும்பினால் எத்தனை நாட்களில் அதன் பலன் கிடைக்கும்? என்பது பற்றிய விஷயங்களை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இதில் திருப்தி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும்.
2வது விஷயம்: இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுப்பதன் நோக்கமே ஏதேனும் ஒரு அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அதனை பயன்படுத்துவதற்கு தான். இதனால் மருத்துவ சிகிச்சையின்போது அனைத்துவித செலவுகளையும் அந்த இன்சூரன்ஸ் பாலிசி உள்ளடக்கி உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் மருத்துவமனை செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம், மருத்துவ பரிசோதனை, மருந்து, மாத்திரை, டாக்டர் கட்டணம், மருத்துவ அறை வாடகை என முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் நமது பாலிசி வழங்குமா? என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
3வது விஷயம்: சில இன்சூரன்ஸ் பாலிசிகள் மருத்துவ சிகிச்சை செலவு மற்றும் மருத்துவமனை அறைக்கான வாடகையில் வரம்புகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளன. இதனால் அதிகபட்சம் மருத்துவ சிகிச்சை செலவு எவ்வளவு வரும்? அதிகபட்சமாக இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ அறையின் வாடகைக்கு பணம் வழங்கும்? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பல பேர் இதுதெரியாமல் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கைகளில் இருந்து கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
4வது விஷயம்: தற்போது ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதான மருத்துவ சிகிச்சை முறைகள் அறிமுகம் ஆகின்றன. உதாரணமாக தற்போது ‛ஏர் ஆம்புலன்ஸ்’ நடைமுறையில் உள்ளது. இதனால் அந்த சிகிச்சை முறைகளுக்கும் நாம் எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி பொருத்தமாக இருக்குமா? என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அதோடு Pre Hospitalization and Post hospitalization என்பது 120 நாளுக்கு மேலாக இருக்கிறதா? என்பதை அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.
5வது விஷயம்: மருத்துவ சிகிச்சை, பரிசோதனைகள் தவிர அங்கு நாம் உண்ணும் உணவு, நாம் பயன்படுத்தும் மாஸ்க், கையுறை, பாதுகாப்பு உடைகளை உள்ளடக்கிய consumables பொருட்களுக்கான செலவை அந்த இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுள்ளதா? என்பதை அறிந்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த இன்சூரன்ஸ் திட்டம் பொருந்துமா? பொருந்தும் என்றால் அனைத்து வகையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் பொருந்துமா? என்பதையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.