உங்கள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் எந்த சிகிச்சையும் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் அல்லது வேறுபல சலுகைகள் வழங்கப்படும்.
அடுத்த நொடி குறித்து நிச்சயமற்ற வாழ்க்கையில் நம் உடல் ஆரோக்கியத்திற்காக மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது மிக அவசியம். எதிர்பாராத விபத்து, திடீர் உடல்நலக்குறைவு போன்ற காரணங்களுக்காக நாம் மிகப் பெரிய பொருட்செலவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள நேரிடும்போது இந்த காப்பீடு நமக்கு உதவியாக இருக்கும்.
எனினும், ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய பாலிசியை நாம் புதுப்பிக்கும்போது ப்ரீமியம் கட்டணம் அதிகரித்திருப்பது நமக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக அமைகிறது. தனிநபர் பாலிசி என்றாலும், குரூப் பாலிசி என்றாலும் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடுகிறது. இவ்வாறு ப்ரீமியம் அதிகரிப்பது ஏன், அதை நாம் தடுப்பது எப்படி என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ப்ரீமியம் அதிகரிப்பது ஏன்?
நிதி ஆலோசனைகளை வழங்கும் ஆன்லைன் நிறுவனமான் பேங்க்பஜார்.காம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி இதுகுறித்து கூறுகையில், “வயது, மருத்துவப் பின்னணி மற்றும் ஒட்டுமொத்த மார்க்கெட் சூழ்நிலை ஆகிய அனைத்தையும் பரிசீலனை செய்து ப்ரீமியம் கட்டணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து நீங்கள் உடனுக்குடன் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.
உங்கள் தேவைகளை முடிவு செய்யுங்கள்:
தற்போதைய மருத்துவக் காப்பீட்டில் என்னென்ன பிரிவுகளின் கீழ் கட்டணம் செலுத்துகிறீர்கள் என்பதை பார்க்கவும். உங்களுக்கு தேவையற்ற சேவைகளுக்காக நீங்கள் பணம் செலுத்திக் கொண்டிருந்தால் அவற்றை நீக்கவும். அதே சமயம், அத்தியாவசிய சேவைகளை நீக்கிவிடக் கூடாது.
நல்ல சேவையை தேர்வு செய்யலாம்:
மார்க்கெட்டில் எண்ணற்ற காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. போட்டிகள் அதிகம் என்பதால் சலுகை மற்றும் புதுமையான ஆஃபர்களை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. நீங்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக சேவைகளை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.
பாலிசி ரைடர்:
அடிப்படையான மருத்துவக் காப்பீட்டுடன் கூடுதலாக நமக்கு என்னென்ன சேவைகள் தேவைப்படுகின்றன என்பதை தேர்வு செய்ய பாலிசி ரைடர் வாய்ப்பு அளிக்கிறது. சில ரைடர்கள் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், அவை உண்மையாகவே நமக்கு தேவை என்றால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
உரிமை கோரல் பெறாததற்கு போனஸ்:
உங்கள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் எந்த சிகிச்சையும் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் அல்லது வேறுபல சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக ப்ரீமியம் தொகையில் டிஸ்கவுண்ட் வழங்கப்படும். இவற்றை பயன்படுத்திக் கொள்ளவும்.
ஆரோக்கியமான வாழ்வியல் முறை:
உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்துதான் உங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பெரும்பாலான நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்வியலை முன்னெடுத்தால் அதற்கேற்ப ப்ரீமியம் தொகையை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை பெறலாம்.