அமெரிக்க டாலரை வலுவிழக்கச் செய்ய சில நாடுகள் நடவடிக்கை எடுத்தால், 100 சதவீத வரி விதிக்கப்படும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, Ethiopia, ஈரான் மற்றும் United Arab Emirates, உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் போது, அமெரிக்க டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் நடைபெற்றது. அதற்கான முயற்சியையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், டாலருக்கு பதிலாக மாற்று கரன்சியை பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை இந்தியா முன்வைத்துள்ளது. பரிவர்த்தனைக்கான Currency யை மாற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை.
பிரிக்ஸ் மற்றும் பிற வளரும் நாடுகள் அமெரிக்க டாலர் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துகிறது என்று கூறுகின்றன. இந்த நாடுகள் புதிய கரன்சியை உருவாக்க மாட்டோம் அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக எந்த கரன்சியையும் ஆதரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்று டிரம்ப் தனது Truth Social பதிவில் கூறியுள்ளார். அப்படிச் செய்யாவிட்டால், அவர்கள் மீது 100 சதவீத வரி விதிக்கப்பட்டு, அமெரிக்க சந்தையில் வியாபாரம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.