மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அது தொடர்பான சில வார்த்தைகள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதல்முறை முதலீடு செய்பவர்களும் இது போன்ற வார்த்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனெனில் சில வார்த்தைகள் முன்பு கேட்டிடாத வார்த்தைகளாக கூட இருக்கும். அப்படி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் 2 முக்கிய சொற்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அவை NAV மற்றும் iNAV.
இந்த 2 வார்த்தைகளும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை மதிப்பிடுவதற்கான முக்கிய அளவீடுகள் ஆகும். இந்தக் கட்டுரையில் NAV மற்றும் iNAV என்றால் என்ன?, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இவை ஏன் முக்கியம்? என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நிகர சொத்து மதிப்பு (NAV): நிகர சொத்து மதிப்பு என்பது மியூச்சுவல் ஃபண்ட்-இன் ஒரு யூனிட் விலையைக் குறிக்கிறது. இதை ஒரு ஃபார்முலாவை வைத்து கணக்கிடலாம். அதாவது நிகர சொத்து மதிப்பு என்பது மொத்த சொத்தோடு மொத்த கடன்களை கழித்த பிறகு மொத்தமாக நிலுவையில் உள்ள பங்குகளின் மூலம் வகுக்க வேண்டும்.
NAV = (மொத்த சொத்துக்கள் – மொத்த பொறுப்புகள்) / மொத்தமாக நிலுவையில் உள்ள பங்குகள்
அதேபோல ஒவ்வொரு வர்த்தக நாளில் முடிவிலும் NAV புதுப்பிக்கப்படும். முதலீட்டாளர்கள் அந்த நாள் NAV-யின் அடிப்படையில் தான் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். NAV என்பது அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-இன் சந்தை மதிப்பை கணக்கிட உதவுகிறது.
உதாரணமாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-இன் மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடி என்று வைத்துக் கொள்வோம். இதற்கான மொத்த பொறுப்புகள் ரூ.10 கோடி. மேலும் நிலுவையில் உள்ள மொத்த யூனிட்களின் எண்ணிக்கை ரூ.10 கோடி என வைத்துக் கொள்வோம். அப்படியானால் NAV-இன் மதிப்பு ரூ.9. இதன் பொருள் ஒவ்வொரு யூனிட்டின் விலையும் ரூ.9 ஆகும்.
iNAV: NAV மதிப்பு என்பது ஒவ்வொரு நாளும் மாறக்கூடியதாக இருக்கும். iNAV என்பது நிகழ் நேர சொத்து மதிப்பை கணக்கிட பயன்படுத்தப்படும் குறியீடாகும். இது ETF-களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மதிப்பு வர்த்தக நேரம் சந்தையின் நகர்வுகள் மற்றும் பத்திரங்களின் நிகழ் விலைகளை பொருத்து மாறுபடும்.