உயர்ந்து வரும் அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் பத்திர வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்கிடையே, கடந்த வாரம் அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் 976 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் முதலீடு செய்திருந்த நிலையில், கடந்த வாரம் பங்குகளின் நிகர விற்பனையாளர்களாக மாறினர்.
அந்த வகையில், கடந்த 16 முதல் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தின் முதல் இரண்டு வர்த்தக நாட்களில், பங்குகளில் 3,126 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், வாரத்தின் பிற்பகுதியில் இந்த போக்கு தலைகீழாக மாறியது. அன்னிய முதலீட்டாளர்கள் அடுத்தடுத்த மூன்று வர்த்தக நாட்களில் 4,102 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
இதன் விளைவாக கடந்த வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த பங்கு விற்பனை 976 கோடி ரூபாயாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இக்குறுகிய கால பின்னடைவு இருந்தபோதிலும், இம்மாதத்தின் போக்கு நேர்மறையானதாகவே உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திறன் மற்றும் அதன் நெகிழ்ச்சியான சந்தைகள் மீதான தொடர்ச்சியான நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதத்தில் இதுவரை 21,789 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.