இந்தியாவில், வணிக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கான (மின்சார கார்கள் உட்பட) ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் என்பதிலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்தில் வரி உயர்வு குறித்த இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த வரி விகிதம் வாகனத்தை விற்பனை (Supplier) செய்பவரின் Margin தொகைக்கு மட்டுமே பொருந்தும். அதாவது ஒரு காரை வாங்கும் போது இருந்த விலைக்கும் அதை விற்கும் போது இருக்கும் விலைக்கும் உள்ள வித்தியாச தொகைக்கு மட்டுமே வரி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் கௌரி ராமச்சந்திரன் கூறுகையில், “தனிநபர்கள் கார்களை விற்கும்போது பெயரை மட்டும் மாற்றிக்கொள்வார்கள். ஆனால், வாகனத்தின் எண் மாறாது. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கிலான கார்களுக்குப் பெயர்கள் மாற்றப்படும். ஒரு குடும்பத்திற்குள் கூட கார்களுக்குப் பெயர்கள் மாற்றப்படும். அதனால் அவற்றுக்கு ஜி.எஸ்.டி விதிக்க முடியாது.
அதனால்தான் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி விதித்துள்ளனர், ஏனெனில் அவற்றுக்கு வியாபார நோக்கம் இருக்கும். தனிப்பட்ட நபர்களுக்கு வியாபார நோக்கம் இல்லை,” என்றார். இந்த வியாபார நோக்கத்தால்தான், தனிப்பட்ட நபர்களுக்கு அல்லாமல் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
“எனினும், இது சாமானியர்களுக்கு, குறிப்பாக பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நிறுவனங்கள் அந்த கார்களை ஜி.எஸ்.டியுடன் விற்கும்போது அவர்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்,” என கூறுகிறார் கௌரி.
பழைய கார்களுக்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து விற்கும்போது அந்த கார்களுக்கான தேவை குறைந்து, நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
இதுதொடர்பாக தொழில் ஆலோசகர் Shyam Shekhar , “உதாரணமாக, நான் ஒரு நிறுவனம் நடத்திவருகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் ஒரு காரை வாங்கி அதை என் நிறுவனத்திற்கு விற்கும்போது கூட முன்பு வரி இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முன்னர் இதற்கென மதிப்பு கூட்டு வரி (VAT) இருந்தது. முன்பு 12.5% கட்டணம் இருந்தது,” என்கிறார்.
ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபோது, பழைய கார்களை விற்கும் தொழிலை தவறுதலாக அரசு கவனித்திருக்காமல் இருந்திருக்கலாம் என்கிறார் Shyam .
“இப்போது பழைய வாகனங்களை வாங்கி, விற்பது மிகப்பெரிய, முறைப்படுத்தப்பட்ட தொழிலாக வளர்ந்திருக்கும் சமயத்தில் அதற்கு வரி விதிக்க வேண்டும் என அரசு நினைப்பது இயல்பானதுதான். அது, அரசுக்கான வருவாய் ஆதாரமாக உள்ளது. இத்தொழில்களுக்கு ஒரே இடத்தில் வரி விதிப்பது எளிதானது என, அரசாங்கம் கருதுகின்றது. மத்திய அரசு, மாநிலங்கள் என அனைத்துத் தரப்புக்கும் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக, வருவாய் ஆதாரம் தேவைப்படுகின்றது,” என கூறுகிறார் அவர்.
இந்த வரி அதிகம் தான் எனக்கூறும் அவர், பல்வேறு தரப்புகளின் கருத்தைக் கேட்டு பின்னர் அந்த வரியை அரசு குறைக்கக்கூடும் என்று கருதுகிறார்