
SIP Investment: வருமானம் குறைவாக இருந்தாலும், சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான். நீண்ட காலம் முதலீட்டில், வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் பரஸ்பர நிதியம். SIP முதலீட்டை இரண்டு வழிகளில் செய்யலாம். முதலில், SIP திட்டத்தில் ஒரு நிலையான தொகையுடன் தொடங்கி, நீண்ட காலத்திற்கு அதே தொகையை மாதம் தோறும் முதலீடு செய்யலாம். மறுபுறம், உங்கள் நிதி இலக்கை குறுகிய காலத்தில் அடைய, ஸ்டெப்-அப் SIP என்ற முதலீட்டு முறையை பின்பற்றலாம்.
உதாரணத்திற்கு, சுமார் 20 அண்டுகளில் எஸ்ஐபி மூலம் ரூ.1 கோடியைச் சேர்க்க வேண்டும் நீங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை அடைய ரெகுலர் எஸ்ஐபி மற்றும் ஸ்டெப்-அப் எஸ்ஐபியில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஸ்டெப்-அப் எஸ்ஐபி டாப்-அப் எஸ்ஐபி என்பது, வருடா வருடம் உங்கள் மாதந்திர முதலீட்டு அளவை வருமானத்திற்கு ஏற்ப அதிகரிப்பது. நீங்கள் எஸ்ஐபியை ரூ.5,000 உடன் தொடங்கி ஒவ்வொரு வருடமும் 10% என்ற அளவில் முதலீட்டு தொகையை அதிகரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த வருடம் ரூ.5,000 என்பதன் 10% தொகையான ரூ.500 என்ற அளவில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அடுத்த ஆண்டு, அதாவது இரண்டாம் ஆண்டுக்கான உங்கள் எஸ்ஐபி ரூ.5,500 ஆக இருக்கும். பின்னர் அடுத்த ஆண்டில் அதாவது மூன்றாம் ஆண்டில் அதில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதாவது ரூ.550 என்ற அளவில் உயர்த்தினால் மூன்றாவது ஆண்டில் ரூ.6,050 என்ற அளவில் முதலீடு செய்வீர்கள்.
20 ஆண்டுகளில் ஒரு கோடி கார்பஸை உருவாக்கி கோடீஸ்வரர் ஆகலாம்
முதலீட்டு அளவை வருமானத்திற்கு ஏற்ப அதிகரிப்பதன் மூலம், 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.35,05,230 என்ற அளவில் இருக்கும். இதில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.66,38,015 என்ற அளவில் இருக்கும். இதன் மூலம் 20 ஆண்டுகளில் ரூ.1,01,43,245 என்ற அளவிலான தொகையை பெற்று கோடீஸ்வரர் ஆகலாம்.
வழக்கமான SIP மூலம் 20 வருடங்களில் கோடீஸ்வரர் ஆக தேவையான முதலீடு
ரெகுலர் எஸ்ஐபி மூலம் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.11,000 முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.11,000 முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மொத்த முதலீடு ரூ.26,40,000 என்ற அளவில் இருக்கும். SIP முதலீட்டின் சராசரி வருமானம் 12 சதவீதம் என கணக்கிட்டால், 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ.83,50,627 வட்டி கிடைக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு மற்றும் வட்டி இரண்டு சேர்ந்து உங்கள் கையில் ரூ.1,09,90,627 இருக்கும்.
SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. SIP வருமானமும் சந்தை அடிப்படையிலானது. இதன் பொருள் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இருப்பினும், நீண்ட கால SIP முதலீட்டின் சராசரி வருமானம் சுமார் 12 சதவிகிதம் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருமானம் சந்தையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.