இந்தியாவில் தற்போது வேலைக்கு செல்பவர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் நம்முடைய ஓய்வு காலத்திற்கும் ஒரு கணிசமான தொகையை சேர்த்து விட முடியும் என எண்ணுகின்றனர்.
35 வயதாகக் கூடிய ஒரு நபர் ஜனவரி மாதத்தில் இருந்து மாதம் தோறும் 20,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே இவர் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறார். தனக்கு 60 வயது ஆகும்போது தன்னிடம் 10 கோடி ரூபாய் நிதி தொகுப்பு இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை எரிசக்தி சார்ந்த துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் தான் நினைத்த நிதி இலக்கை எட்ட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஒன் பைனான்ஸ் (1 Finance) நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு தலைவர் ரஜானி டன்டாலே பதில் அளித்துள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்து அல்லது செக்டர் அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளை தனிப்பட்ட முறையில் நீங்களே தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்பது சிக்கல் நிறைந்தது எனக் கூறியுள்ளார். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்த அதிக அனுபவம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலாக நீங்கள் லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து அதில் உங்களுடைய தொகையை முதலீடு செய்ய வேண்டும், உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்களே எந்த துறை வளர்ச்சியில் இருக்கிறதோ அதில் தான் முதலீடு செய்யப் போகிறார்கள் என்பதால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.
துறை சார்ந்த பங்குகள் ஒரு காலகட்டத்தில் ஏற்றத்துடனும், குறிப்பிட்ட காலகட்டத்தில் இறக்கத்துடனும் இருக்கும் என்பதால் தனிப்பட்ட முறையில் இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே அந்த ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றபடி முதலீட்டை மாற்றி அமைக்க முடியும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
நானே முதலீடு செய்து கொள்கிறேன் என நினைத்தால், இண்டெக்ஸ் ஃபண்டு மற்றும் ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது என தெரிவித்துள்ளார்.