மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், ₹15 லட்சம் முதல் ₹20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 25% வரி விதிப்பை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
இப்போது நடைமுறையில் உள்ள வரி விதிப்பில் இரண்டு முறைகள் இருக்கின்றன. இவை இரண்டையும் மக்கள் தேர்வு செய்து பயன்படுத்த முடியும். முதலில், பழைய வரி விதிப்பை எடுத்துக்கொண்டால், ₹2.5 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை. ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை சம்பாதித்தால், 5% வரி இருக்கின்றது. ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை சம்பாதித்தால், 20% வரி விதிக்கப்படுகிறது. ₹10 லட்சம் மேல் சம்பாதித்தவர்களுக்கு 30% வரி கட்ட வேண்டும்.
இந்த வரி விதிப்பில் 80C, 80D போன்ற சலுகைகளின் மூலம் கொஞ்சம் வரி விலக்கு பெற முடியும். ₹7 லட்சம் வருமானம் வரை சம்பாதிப்பவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தி இன்னும் அதிக விலக்கு பெற முடியும். கடந்த பட்ஜெட்டில் இந்த வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பழைய முறையை வேண்டாம் என்று சொல்பவர்கள் புதிய முறையை பின்பற்றலாம். புதிய முறையில் 80C, 80D போன்ற சலுகைகள் கொண்டு வரியில் விலக்கு பெற முடியாது. இதுவரை இருந்த விதிப்பின்படி, ₹2.5 லட்சம் வரை வரி இல்லை. ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை 5% வரி, ₹5 லட்சம் முதல் ₹7.5 லட்சம் வரை 10% வரி, ₹7.5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை 15% வரி, ₹10 லட்சம் முதல் ₹12.5 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய வரி விதிப்பில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ₹7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட தேவையில்லை.