பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2021 ஆம் சட்டப்பேரவைத் தேர்வு வாக்குறுதியில், திமுகவின் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது!
இந்த நிலையில், ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கும் நோக்கில், மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு தற்போது அமைத்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 1/4/2003 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில், ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 1/1/2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், மாநில அரசு பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும், மாநில அரசு பணியாளர்கள் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றுக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையையும், பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு வழங்கிட, அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது.
கூடுதல் தலைமை செயலாளர் Gagandeep Singh Bedi தலைமையிலான குழுவில், சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் K. R. Shanmugam, அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் பிரதீப் தயால் ஆகியோர் உறுப்பினர் செயலாளர்களாக குழுவில் இடம்பெற்றுள்ளனர்.