
எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமானவரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமானவரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில், இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய வருமானவரி மசோதா 400 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றைக் கொண்டதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புதிய சட்டத்தால் வரி விகிதங்களில் மாறுதல் ஏதும் இல்லை என்றும், சட்டத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வருமானவரி மசோதா 2025 என்று அழைக்கப்படும் இந்த புதிய மசோதா 2026 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.