
பங்குச்சந்தை ஒரு பக்கம் தாறுமாறாகச் சரிந்து வருகிறது. மறுபுறம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தங்கத்தை வாங்க யோசித்து வருகிறார்கள். எப்படியும் பங்குச்சந்தை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் போது தங்கம் விலை குறையும். அப்போது வாங்கிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால், இது உண்மை தானா என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
தங்கம் விலை இன்று சற்று குறைந்திருந்தாலும் கூட கடந்த சில நாட்களாகவே அது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்தாண்டு தொடக்கம் முதல் மட்டும் தங்கம் விலை சுமார் 11% வரை அதிகரித்துள்ளது.
பங்குச்சந்தை
பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில், மறுபுறம் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இது இயல்பான ஒன்று தான். எப்போதெல்லாம் பணவீக்கம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். இதுவே இப்போது தங்கம் விலை உயர காரணமாக இருக்கிறது.
இதனால் நிதி மேலாளர்கள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட சார்ந்த இடிஎஃப்கள் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் மட்டும் ரூ.3,751.42 கோடி தங்க இடிஎஃப்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகமாகும். இந்தளவுக்குத் தங்கம் விலை உயர்வதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதையே இது காட்டுகிறது.
தங்கம்
அதேநேரம் இப்போது தங்கம் விலை அதிகரிக்கிறது என்பதால் தங்கத்திலேயே எல்லா தொகையையும் முதலீடு செய்துவிடக்கூடாது என்கிறார்கள் வல்லுநர்கள். எப்போதும் மக்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் இது ஆபத்தைக் குறைப்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முதலீடு எப்படி இருக்க வேண்டும்
இது தொடர்பாக வல்லுநர் பி பத்மநாபன் கூறுகையில், “தங்கத்திற்கும் பங்குச்சந்தைக்கும் எதிர்மறை தொடர்பு இருக்கிறது. அதாவது தங்கம் விலை அதிகரிக்கும் போது பங்குச்சந்தை சரியும். பங்குச்சந்தை உயரும் போது தங்கம் விலை அதிகரிக்காது. இதனால் மக்கள் இரண்டிலும் முதலீடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே ரிஸ்க்கை குறைக்கும்.
உங்கள் போர்ட்ஃபோலியோவில் பல சொத்துக்கள் இருக்க வேண்டும். ஈக்விட்டி (பங்குச்சந்தை), கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் என எல்லாம் இருக்க வேண்டும்.. அப்போது தான் ரிஸ்க் குறையும். அதேநேரம் சில அரிய சூழல்களில் தங்கம் மற்றும் பங்குச்சந்தை என இரண்டுமே கூட உயரும். இது இப்போது மட்டுமின்றி கடந்த 2003- 2008 காலகட்டத்திலும் இதுபோல நடந்துள்ளது” என்றார்.
தங்கம் முக்கியம்
அதாவது பங்குச்சந்தை ஆபத்துகளைக் குறைக்கப் பலரும் தங்கத்தில் முதலீடு செய்தாலும் கூட இரண்டுமே அதிகரிக்கும் சூழல்களும் இருந்துள்ளன. இதனால் பங்குச்சந்தை முதலீட்டுக்குக் கொடுக்க வேண்டிய அதே முக்கியத்துவத்தைத் தங்க முதலீட்டிற்கும் நாம் தரலாம். பங்குச்சந்தை என்பது நீண்ட கால நோக்கில் நல்ல லாபத்தைக் கொடுத்தாலும் தங்கத்திலும் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. நீண்ட கால நோக்கில் பங்குச்சந்தையில் லாபம் அதிகம் என்றாலும் தங்கம் பாதுகாப்பானது என்பதால் அதை மிஸ் செய்யக்கூடாது
எப்படி வாங்கலாம்
மேலும், தங்கத்தை வெறுமன முதலீட்டிற்காக வாங்குகிறார்கள் என்றால் அதை நகையாக மட்டுமே வாங்க முடியும் என்று இல்லை. ஏனென்றால் நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றைக் கட்ட வேண்டும். அதேநேரம் தங்க இடிஎஃப்களாக (ETF) வாங்கும் போது இவை எதுவும் வராது. பங்குச்சந்தையில் ஒரு பங்கை வாங்குவது போல ஈஸியாக வாங்கி விற்கலாம். இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.