
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக முதலீடு செய்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. மியூச்சுவல் பண்டின் மேலாளர்கள் முதலீட்டாளர்களிடம் திரட்டும் பணத்தை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நல்ல வருமான வாய்ப்புள்ள பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். அதேசமயம், மியூச்சுவல் பண்டுகள் தொடர்ந்து ரிஸ்க்கானதாக கருதப்படுகின்றன. முதலீடுகள் பங்குகளுடன் பிணைக்கப்படும்போது அவை பெரும்பாலும் அதிக ஆபத்துக்களாக கூறப்படுகிறது.
அபாயங்களை புறக்கணித்து, வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவுக்கு ஆபத்தானது. எனவே மியூச்சுவல் பண்டின் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் முன்னும், செய்த பின்னும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் ரிஸ்க் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும். பொதுவாக மியூச்சுவல் பண்டுகளின் ரிஸ்க்கை அளவிட பீட்டா,ஆல்பா,ஆர்-ஸ்கொயர்டு,ஸ்டாண்டர்ட் டீவியேஷன்,ஷார்ப் ரேஷியோ மற்றும் சோர்டினோ ரேஷியோ ஆகிய 6 வழிகள் உள்ளன
பீட்டா என்பது ஒட்டுமொத்த சந்தை அல்லது குறிப்பிட்ட பெஞ்ச்மார்க் குறியீட்டுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் பண்டின் ஏற்ற இறக்கத்தினை அளவிடும் அளவீடு ஆகும். பீட்டா மதிப்பு 1 என்ற அளவில் இருந்தால், பண்டின் விலை சந்தையுடன் ஒத்திசைவாக நகரும் என்பதை குறிக்கிறது. பீட்டா மதிப்பு 1ஐ காட்டிலும் அதிகமாக இருந்தால், சந்தையை காட்டிலும் பண்ட் பெரிய ஏற்ற இறக்கங்களை காணும் என்பதை குறிக்கிறது.
ஆல்ஃபா என்பது ஒரு மியூச்சுவல் பண்டின் செயல்திறனை புரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும். அதன் பெஞ்ச்மார்க் குறியீட்டுடன் தொடர்புடைய ஒரு அளவீடு ஆகும். நேர்மறையான ஆல்ஃபா என்பது பண்ட் அதன் பெஞ்ச்மார்க் குறியீட்டை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டதை குறிக்கிறது. மேலும் பயனுள்ள மேலாண்மை மற்றும் உத்தியை குறிக்கிறது. ஆர்-ஸ்கொயர்டு என்பது ஒரு பண்டின் செயல்திறன் அதன் அளவுகோலுடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்புடையது என்பதை அளவிடுகிறது.
ஸ்டாண்டர்ட் டீவியேஷன், ஒரு பண்டின் சராசரி வருவாயை சுற்றியுள்ள வருமானத்தின் மாறுபாடு அல்லது ஏற்ற இறக்கத்தை அளவிட உதவுகிறது. ஷார்ப் விகிதம் என்பது ஒரு பண்டின் ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட செயல்திறனை மதிப்பிடுகிறது.சோர்டினோ விகிதம் கிட்டத்தட்ட ஷார்ப் விகிதம் போன்றது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. இது பண்டின் எதிர்மறை அல்லது எதிர்மறை ஏற்ற இறக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தும்