
இப்போது மக்கள் பலரும் சிப் முறையில் முதலீடு செய்தாலும் கூட அது குறித்துத் தெளிவான பார்வை இருப்பதில்லை.. சிப் மூலம் எதில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும்.. எதில் லாபம் அதிகம் கிடைக்கும்.. நமக்கு ஏற்ற முதலீட்டு முறையை ஈஸியாக தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் மக்கள் மெல்லச் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்றால் இப்போதே அதற்குச் சேமிக்க வேண்டும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
SIP
இதனால் மக்கள் பலரும் சிப் (SIP) எனப்படும் சிஸ்டமெடிக் Investment scheme -ல் முதலீடு செய்கிறார்கள். சிப் ஒரு முதலீட்டு முறையாகும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையைத் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே இந்த சிப் முறையாகும். இருப்பினும், இந்த சிப் முறையைப் பயன்படுத்தி நாம் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எனப் பல ஆப்ஷன்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உதவும் என்றும் ஒவ்வொரு தேவையைப் பூர்த்தி செய்ய இவை உதவும் என்றும் டிரேஜினி நிறுவனத்தின் சிஓஓ திரிவேஷ் தெரிவித்துள்ளார். இதில் எது பெஸ்ட் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதி (PPF)
முதலில் வருங்கால வைப்பு நிதி அல்லது PPF இவை 15 வருட லாக்-இன் காலத்துடன் கூடிய பாதுகாப்பான, நீண்ட கால முதலீடாகும். லாக் இன் என்றால் சிலருக்கு என்னவென்று தெரியாது. அதாவது அந்த குறிப்பிட்ட காலத்திற்கு உங்களால் பணத்தை எடுக்க முடியாது. அதாவது நீங்கள் இதில் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளுக்கு முழு தொகையை எடுக்க முடியாது. முழு தொகையைத் தான் எடுக்க முடியாதே தவிர ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பகுதியளவு பணத்தை எடுக்கலாம். இது தொடர்பாக திரிவேஷ் கூறுகையில், “சுமார் 8% நிலையான வருமானம் கிடைக்கும். முதலீட்டில் இது குறைவு தான். இருப்பினும், அதிக வருமானத்தை விடப் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதுவோருக்கு இது சரியான தேர்வாக இருக்கும். லாபம் குறைவாக இருந்தாலும் போதும்.. ரிஸ்க் வேண்டாம் எனக் கருதுவோருக்கு இது சரியாக இருக்கும்” என்றார்.
என்பிஎஸ் (NPS)
அடுத்து என்பிஎஸ்.. இது ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட திட்டமாகும். “இது முதன்மையாக ஒரு ஓய்வூதிய திட்டமாகும்.. ஓய்வூதியத்திற்குப் பணம் சேர்ப்போர் இதில் முதலீடு செய்யலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சில நிபந்தனைகள் உடன் குறிப்பிட்ட பணத்தை வெளியே எடுக்கலாம். இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், குறுகிய காலத்தில் பெரியளவில் லாபம் இருக்காது. அதேநேரம் நீண்ட கால நோக்கில் நல்ல லாபம் கிடைக்கும். இதில் நமக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். இது நீண்ட கால நிதித் திட்டமிடலுக்கு ஏற்றதாக இருக்கும்” என்றார்.
மியூச்சுவல் ஃபண்ட்கள்
அடுத்து மியூச்சுவல் ஃபண்ட்கள்.. பெரும்பாலான மக்கள் சிப் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களிலேயே முதலீடு செய்கிறார்கள். இதில் விரும்பிய மியூச்சுவல் ஃபண்ட்களில் விரும்பிய தொகையை விரும்பிய காலத்திற்கு முதலீடு செய்யலாம். இருப்பினும், நீண்ட கால முதலீடு செய்தால் மட்டுமே இதில் நல்ல லாபம் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட்களை பொறுத்தவரைச் சந்தை சார்ந்து, கடன் பத்திரங்கள் சார்ந்து, தங்கம் சார்ந்தது எனப் பல வகைகளில் இருக்கும். அதில் நீங்கள் எதில் முதலீடு செய்கிறீர்களோ.. அதைப் பொறுத்து லாபமும் கிடைக்கும்.
எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
சரி, உங்களுக்கு ஏற்ற முதலீட்டை எப்படித் தேர்வு செய்வது.. இதற்கான ரூல்ஸ் ரொம்பவே எளிமையானது. அதாவது எதில் உங்களுக்கு லாபம் குறைவாக இருக்கிறதோ அதில் ரிஸ்க் குறைவு.. இதிலும் கூட ரிஸ்க் குறைவு தானே தவிர, மொத்தமாக இல்லை எனச் சொல்ல முடியாது. அதேநேரம் ரிஸ்க் அதிகம் என்றால் அதற்கேற்ப லாபமும் அதிகம் கிடைக்கும். எனவே, உங்களுக்கு எது தேவை என்பதை ஈஸியாக நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.