
மக்கள் தற்போது மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். சிலர் தங்களது வாரிசுகளின் எதிர்காலத்துக்காக குழந்தைகள் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் பான் இல்லாத குழந்தைகளின் பெயரில் மியூச்சுவல் பண்டில் கணக்கு தொடங்கி முதலீடு செய்ய முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் பெயரில் தாராளமாக மியூச்சுவல் பண்டில் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம் என்று எடெல்வைஸ் மியூச்சுவல் பண்டின் தலைமை செயல் அதிகாரி ராதிகா குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராதிகா குப்தா கூறியதாவது:
உங்கள் குழந்தைகள் பெயரில் தாராளமாக மியூச்சுவல் பண்டில் மைனர் (சட்டப்படி வயது நிரம்பாதவர்) கணக்கு தொடங்கி முதலீடு செய்து வரலாம். மைனர் கணக்கை தொடங்குவதற்கு, பாதுகாவலரின் பான் எண் மட்டுமே கட்டாயம். மைனரின் பான் கட்டாயம் இல்லை. அடுத்து, மைனருக்கும் பாதுகாவலருக்கும் இடையிலான உறவை உறுதி செய்வதற்காக மைனரின் பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது நீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆவணம் போன்ற உறவு சான்று ஆவணங்கள் தேவை.
கணக்கு தொடங்குவதற்காக பெறப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மைனர் கணக்கு உருவாக்கம் இரண்டு வேலை நாட்களில் முடியலாம். கணக்கு தொடங்கும் போது அல்லது தொடங்கியது முதல் பரிவர்த்தனை தொடங்கலாம். பாதுகாவலர் அல்லது மைனர் இருவரின் வங்கி கணக்குகளையும் எஸ்ஐபி சந்தாக்கள் மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் மீட்புத்தொகை (மியூச்சுவல் பண்டில் இருந்து பெறும் பணம்) மைனரின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.
குழந்தையின் பெயரில் எஸ்ஐபி தொடங்குவதன் மூலம், அவர்களுக்கு நல்ல பணப் பழக்கத்தை கற்றுக் கொடுக்கிறோம். மியூச்சுவல் பண்ட் கணக்கு குழந்தைக்கு சொந்தமாக இருப்பதால், குழந்தையின் நலனை கருதி ஒருவர் அதிக இலக்கை நோக்கியவராகவும், நீண்ட காலமாக சிந்திக்கவும் முனைகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். செபியின் தகவலின்படி, குழந்தைகள் பண்டுகள் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது குழந்தை மேஜர் வயதை அடையும் வரை அல்லது இந்த இரண்டில் எது முன்னதோ அதுவரை லாக் இன் காலம் இருக்கும். அதாவது, அதுவரை அந்த பண்டில் போட்ட முதலீட்டை திரும்ப பெற முடியாது.