
இன்றைய பெண்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு பல்வேறு துறைகளில் தற்போது சாதித்து வருகின்றனர். மேலும் நிதி கல்வியறிவு, நிதி திட்டமிடல் மற்றும் நிதி முடிவெடுப்பதில் பெண்கள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகின்றனர். இதனை தற்போது வெளியாகியுள்ள பாலிசிபஜார் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. பாலிசிபஜார் அறிக்கையின்படி, பெண்கள் தங்கள் முதலீடுகளில் 3ல் ஒரு பகுதியை ஓய்வூதியம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக செலவிடுகின்றனர்.
இந்த நிதியாண்டில் பெண்கள் டேர்ம் இன்ஸ்யூரன்ஸ் வாங்கும் விகிதம் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. 31-40 வயதுக்குட்பட்ட பெண்கள் டேர்ம் இன்ஸ்யூரன்ஸை அதிகரிப்பதில் முன்னணியில் (48 சதவீதம்) உள்ளனர். 39 சதவீத டேர்ம் இன்ஸ்யூரன்ஸ் இல்லத்தரசிகளால் வாங்கப்பட்டுள்ளன. 44 சதவீத பெண்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான டேர்ம் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். டெல்லி, பெங்களூரு,மும்பை, புனே,சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் உள்ள பெண்கள் டேர்ம்இன்ஸ்யூரன்ஸ் வாங்குவதில் முன்னணியில் உள்ளனர். இதற்கு அதிக நிதி கல்வியறிவு, அதிக செலவழிப்பு வருமானம் ஆகியவையே காரணம்.
பெண்கள் மாதாந்திர பிரீமியம் செலுத்துதலை பெருமளவில் விரும்புகிறார்கள். இது பணப்புழக்க நெகிழ்வுத்தன்மை, சிறந்த பட்ஜெட் மேலாண்மை மற்றும் பெரிய முன்கூட்டிய செலவுகளை தவிர்ப்பதற்கான பெண்களின் உறுதியான விருப்பத்தை குறிக்கிறது. மருத்துவ பணவீக்கத்திலிருந்து பாதுகாக்க அதிக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தேர்வு செய்கிறார்கள். சுமார் 70-75 சதவீத பேர் இப்போது ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான காப்பீட்டு தொகையை தேர்வு செய்கிறார்கள். இது விரிவான நிதி பாதுகாப்பை நோக்கிய மாற்றத்தை குறிக்கிறது.
அதேசமயம் பெண்கள் தங்களது வயதுக்கு ஏற்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்கிறார்கள். 20-30 வயது வரையைிலான பெண்கள் மகப்பேறு சலுகைகள் மற்றும் நல்வாழ்வு திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். 40-50 வயது வரையைிலான பெண்கள் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவமனை செலவுகளை உணர்ந்து ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான காப்பீட்டு தொகையை விரும்புகிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், நாள்பட்ட நோய் மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் முன்பே இருக்கும் நிலைமைகளுக்கான குறுகிய காத்திருப்பு காலங்களுக்கு முன்னுரிமை அளித்து தீவிர நோய் ரைடர்களுடன் கூடிய விரிவான காப்பீட்டை தேடுகிறார்கள்.
2025 பிப்ரவரி நிலவரப்படி, யூனிட் லிங்க்டு இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களில் மொத்த முதலீடுகளில் பெண்களின் பங்கு 18 சதவீதமாக உள்ளது. இந்த மாற்றம் செல்வக் குவிப்புக்கான விருப்பத்தையும் சந்தை சார்ந்த கருவிகளில் முதலீடு செய்வதற்கான விருப்பத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பெண்களின் மொத்த இன்ஸ்யூரன்ஸ் முதலீடுகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை டயர் -1 (முதல் நிலை நகரங்கள்) நகரங்களிலிருந்து வருகின்றன. அதேசமயம் டயர்-2 மற்றும் டயர்-3 (இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை) நகரங்களில் பெண்களின் முதலீட்டு பங்கேற்பு குறைவாகவே உள்ளது. இது அந்த நகரங்களில் பெண்களுக்கு அதிக நிதி கல்வியறிவு முயற்சிகளின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.