
சமீப காலமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.. தங்கம் மற்றும் பங்கு சந்தை ஆகிய இரண்டில் எது சிறந்தது? எதிர்காலத்தில் எந்த முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும்? என குழப்பம் எழுகிறது. எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டு என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அடுத்த 3 ஆண்டுகளில் பங்குச்சந்தை தங்கத்தை விட சிறப்பாக செயல்படும் என கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருவாய் உயர்வு காரணமாக பங்குச்சந்தை செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்பட்டாலும்.. தற்போதைய சந்தை சூழலில் பங்குச்சந்தை மிகவும் விரும்பப்படும் விருப்பமாக இருந்து வருகிறது.
இந்த அறிக்கை குறிப்பாக சென்செக்ஸ் டூ கோல்ட் ரேஷியோவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையின் செயல்திறனையும் தங்கத்தின் செயல்திறனையும் ஒப்பிட்டு தகவல்களை வழங்கியுள்ளது. இந்த விகிதத்தை வைத்து பார்க்கும் போது வரும் ஆண்டுகளில் பங்குச்சந்தை தங்கத்தை விட அதிக வருவாயை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் தங்கத்தின் வருவாய் விகிதம் 12.55 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 10.73 சதவீத வருவாயை மட்டுமே அளித்துள்ளது. இருந்தாலும் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகள் பங்குச் சந்தைக்கு சாதகமாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பார்க்கும்போது தங்கம் பங்குச்சந்தையை விட 36 சதவீதம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளது. தங்கம் பங்குச்சந்தையை விட சில நேரங்களில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் பங்குச்சந்தை நான் முதலீடாளர்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தந்துள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஏப்ரல் மாதத்தில் 10 கிராம் 86,875 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இது வெறும் 0.21% அதிகரிப்பைக் குறிக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 2500 ரூபாய் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்தினால் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தங்கம் மற்றும் பங்குச்சந்தை ஆகிய இரண்டும் நீண்ட காலமாக ஒன்றுக்கொன்று போட்டியிடும் முதலீட்டு விருப்பமாக இருந்து வருகிறது. நிதி நெருக்கடி காலங்களில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பொருளாதார மீட்சி காலங்களில் பங்குச்சந்தை வரலாற்று ரீதியாக நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதே போல பங்குச்சந்தை சிறப்பாக செயல்படும் என்று எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டு அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் பங்குச்சந்தை சிறப்பாக செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.