
சமீப காலமாக உலகளாவிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கு காரணம் அமெரிக்காவின் வர்த்தகக் கூட்டாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பரபரப்பான பரஸ்பர இறக்குமதி வரிகள் தான். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34%, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்த மூன்று நாடுகளையும் தவிர, பல முக்கிய உலக பொருளாதார நாடுகளுக்கும் அமெரிக்கா உயர்ந்த இறக்குமதி வரிகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும்,அந்த நாடுகளுடன் நடந்த வர்த்தக உறவுகளையும் பாதித்ததால், அதன் தாக்கம் பங்கு சந்தைகளிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும், உலகளாவிய மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமும் காரணமாக நிதிசந்தைகள் பெரும் குழப்பமான நிலையில் உள்ளன. கடந்த வாரம் பல உலகளாவிய பங்குச் சந்தைகள் பெரிய இழப்புகளுடன் நிறைவடைந்தன. இது கொரோனா தொற்று பரவிய காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வாரமாகும். அந்தவகையில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், சென்செக்ஸ் மற்றும் நிப்டி, கடந்த வாரம் 6% க்கும் மேல் வீழ்ச்சி கண்டன. ஏப்ரல் 7, திங்கள்கிழமை அன்று சந்தையில் குழப்பம் நீடித்து வந்தது. இரண்டு குறியீடுகளும் கடுமையான இழப்புடன் தொடங்கின. தலா 5% க்கும் மேல் வீழ்ச்சியடைந்தன.
இந்த அனைத்து கட்டணப் போர் மற்றும் சந்தை சரிவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளுக்கு மாற வேண்டும் என சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், என்ன செய்வது? முதலீட்டை நான் எவ்வாறு சேமிப்பது? என்ற கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்தவகையில், டிரம்பின் வரிக் கொள்கைகளால் தூண்டப்பட்ட தற்போதைய சந்தை சூழ்நிலையை சமாளிக்க முதலீட்டாளர்கள் இந்த 10 விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்
1.உங்கள் போர்ட்ஃபோலியோவை ஆராயுங்கள்: உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் நம்பிக்கைக்குரிய பங்குகள் ஏதேனும் உள்ளதா? அல்லது அல்லது எதிர்காலம் தெளிவாக தெரியாத, சந்தேகமான பங்குகள் இருக்கிறதா? வலுவான வணிக மாடல் உள்ள நிறுவனங்களை நீங்கள் தொடருங்கள். ஆனால் முந்தைய செயல்பாடுகள் உறுதியற்ற பங்குகள் பற்றி மறுபடியும் சிந்தியுங்கள். அதாவது, ஒவ்வொரு சந்தை வீழ்ச்சியும் ஒரு கண்ணாடி போல; நீங்கள் வைத்துள்ள முதலீடுகளை பிரதிபலிக்கிறது. அந்தவகையில், இது உங்கள் portfolio-வை பகுப்பாய்வு செய்யச் சிறந்த நேரம் ஆகும்.
2.நீண்ட கால முதலீட்டாளராக இருங்கள்: நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததற்கான நோக்கம் ஒரு மாதம் அல்லது ஆறு மாதம் எனும் குறுகிய கால இலக்கிற்காக இல்லை என்பதைக் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் முதலீடு என்பது 3 வருடங்கள், 5 வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் நீண்டகால இலக்கு ஆகும். அப்படியானால் தற்போதைய வீழ்ச்சியைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? மிகவும் பிரபலமான முதலீட்டாளர் Warren Buffet போன்ற முதலீட்டாளர்கள்கூட சந்தையில் இருந்து வெளியேறாமல், நீண்டகால நோக்குடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத் தான் செய்யும். ஆனால், நல்ல பங்குகள் மற்றும் நிதி திட்டங்கள், காலத்துடன் நிச்சயமாக நல்ல வருவாயை அளிக்கின்றன.
3.SIP முதலீட்டை நிறுத்த வேண்டாம்: சந்தை வீழ்ச்சியடையும் போது SIP (Systematic Investment Plan)ஐ நிறுத்துவது மிகப் பெரிய தவறாக இருக்கும். சந்தை கீழே போகும் நேரத்தில், அதே தொகைக்குப் அதிக யூனிட்கள் (units) கிடைக்கும். அந்த நேரத்தில் நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கலாம். அதாவது, இது தள்ளுபடி விற்பனையில் ஷாப்பிங் செய்வது போல! நீண்டகாலத்தில், இப்படிப் பெற்ற யூனிட்கள் தான் நல்ல லாபத்தை தரும்.
4.பதட்டப்பட வேண்டாம்: கடந்த ஒரு வாரமாக உலகளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான விற்பனையைப் பார்த்த பிறகு, எந்த முதலீட்டாளருக்கும் பதட்டமாகிவிடுவது இயல்பானது. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்; இது நிரந்தரமல்ல. பங்குச் சந்தை உலகில், வீழ்ச்சியும் உயர்வும் இரவு பகலாக இருப்பது போன்றது. இதில் பொறுமையுடன் காத்திருப்பவர்கள் தான் இறுதியில் நன்மை அடைகிறார்கள். இன்று பயந்து எல்லாவற்றையும் விற்றுவிட்டால், நாளை சந்தை மீளும்போது, அதிகமாக வருந்துவது நீங்கள் தான்.
5.பதற்றத்தில் விற்பனை செய்யாதீர்கள்; இது நஷ்டத்தை ஏற்படுத்தும்: சந்தை வீழ்ச்சியடையும் போது, பெரும்பாலானவர்கள் காட்டும் பொதுவான எதிர்வினை என்னவென்றால் எல்லாத்தையும் விற்க வேண்டும் என்பதுதான். ஆனால் இது பெரும்பாலும் மிகப் பெரிய தவறாகவே முடிகிறது. அதனால், நீங்கள் வாங்கிய விலையைவிட குறைவான விலையில் விற்பதன் மூலம், நிஜமான நஷ்டத்தை சந்திக்க நேரிடும். சிறிது நேரம் காத்திருந்து, சிந்தித்து முடிவெடுங்கள். பதட்டத்தில் எடுத்த முடிவுகள், நிதி வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
6.சந்தை வீழ்ச்சிக்குள் முதலீட்டு வாய்ப்பு மறைந்திருக்கும்: பங்குச் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி என்பது தள்ளுபடி விற்பனையைப் போலதான். முன்பு விலை உயர்ந்ததாக இருந்த பங்குகள் இப்போது மலிவாகக் கிடைக்கின்றன. அதனால், இது மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பு! அதாவது, “நீங்கள் ஆபத்தை ஏற்கும் துணிச்சலுடனும், கையில் ஓரளவு கூடுதல் பணமும் இருந்தால், இப்போது நீண்டகால முதலீட்டிற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். சந்தை வீழ்ச்சியின் பின்னால் வாய்ப்புகளை தேடுபவர்களுக்குத்தான் எதிர்கால வெற்றியும் கிடைக்கும்.
7.அவசர நிதியை கைவசம் வைத்திருங்கள்: சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது, இதற்கிடையில், ஏதேனும் தனிப்பட்ட தேவை ஏற்பட்டால் அதாவது, மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு அல்லது ஏதேனும் அவசர நிலை வந்தால், அதற்கு நீங்கள் தயாரா? அவ்வப்போது ஏற்படக்கூடிய அவசரச் சூழ்நிலைகளுக்காக, குறைந்தது 6 முதல் 12 மாத வரையான செலவுகளைத் தாங்கக்கூடிய தொகை, FD, சேமிப்புக் கணக்கு அல்லது லிக்விட் ஃபண்ட் போன்ற எளிதில் பணமாக்கக்கூடிய வடிவத்தில் இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் சேமித்த அவசர நிதி உங்களை முதலீட்டுகளை விற்பதிலிருந்து காப்பாற்றும்.
8.ரிஸ்க் எடுக்கும் திறன்: தினமும் பங்குசந்தையை கவனிப்பது உங்களுக்கு சலிப்பாக இருந்தாலும், அல்லது இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் இருந்தாலும், அது உங்கள் ஆபத்துப் பொறுப்புக்கு மீறிய முதலீடு என்பதைப் பொருள்படுத்தலாம்.” முதலீடு என்பது மனதுக்கு அமைதியை தரவேண்டும், பதற்றத்தை அல்ல. உங்களுக்கு தூக்கமில்லாம, குழப்பமா இருக்குற மாதிரி இருந்தால், அது சரியான முதலீட்டுச் தீர்மானம் இல்லை என்று அர்த்தம். தேவையானால், ஈக்விட்டி (Equity) முதலீட்டை குறைக்கவும், அதற்கு பதிலாக பாலன்ஸ்ட் ஃபண்டுகள் அல்லது கடன் சார்ந்த முதலீடுகள் போன்ற நிலையாக உள்ளதைக் சேர்க்கவும்.
9.நிபுணரை அணுகவும்: “எல்லா பதில்களையும் நீங்களே தேட வேண்டியதில்லை. சில சமயங்களில், ஒரு நிதி ஆலோசகரின் அறிவுரை உங்களுக்கு சரியான திசையை காட்டலாம். இதனால், நீங்கள் மன அழுத்தமின்றி தகவல் அடிப்படையிலான முடிவுகளை எடுக்கலாம். SIP-ஐ நிறுத்த வேண்டுமா இல்லையா, எந்த பங்குகளை விற்கலாம், எங்கு முதலீடு செய்யலாம் என்பதில் குழப்பமாக இருந்தால் நிச்சயமாக ஒரு நிதி நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.
10.சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளுக்கு உடனடி பதிலளிக்க வேண்டாம்:
தினமும், “சந்தை வீழ்ச்சி”, “பொருளாதார மந்தம்” போன்ற தலைப்புகள் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டே இருக்கும். இவை பொதுவாக பயத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லப்படும் செய்திகள். ஆனால், உண்மையான முதலீட்டாளர்கள் இந்த செய்திகளுக்குப் பதிலளிக்காமல், தங்களது நீண்டகால திட்டத்தை பின்பற்றுவார்கள். அதாவது, அந்தச் செய்திகளை பார்த்து பயப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் முதலீட்டு திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் திட்டம், உங்கள் இலக்கு, மற்றும் உங்கள் நேரக் கட்டமைப்பு இந்த மூன்றும் தான் மிக முக்கியமானவை. மற்றவைகளை புறக்கணியுங்கள்.
சந்தை வீழ்ச்சி நல்லதல்ல, ஆனால் சரியான கோணத்தில் சிந்தித்தால், அது கடுமையாகவும் இல்லை.சந்தை வீழ்ச்சி என்பது ஒரு சோதனையாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில், உங்களை ஒரு நலம் வாய்ந்த முதலீட்டாளராக மாற்றும் வாய்ப்பாகவும் அமையலாம். பதற்றத்தில் முடிவெடுக்க வேண்டாம். புத்திசாலித்தனமாக, திட்டமிட்டு செயல்படுங்கள். நினைவில் கொள்ளுங்கள், சந்தை என்றென்றும் கீழே இருக்காது. ஆனால், நன்கு திட்டமிட்டு முதலீடு செய்தவர்கள் சந்தை மீண்டும் உயரும்போது நிச்சயமாக வெற்றியடைகிறார்கள்.