
பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாமானிய மனிதர்களான சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்யும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இது முதலீடு செய்வதற்கு எளிதான வழியாகவும், ரிஸ்க்கும் குறைவு என்பதால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தாலும் நீங்களும் கோடீஸ்வராகலாம். அதற்கு ஒரே ஒரு பார்முலாவை மட்டும் பின்பற்றினால் போதும்.
15+15+25 என்ற பார்முலாவை பின்பற்றி எஸ்ஐபி முதலீட்டை மேற்கொண்டால் உங்களால் ரூ.4 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க முடியும். அதை எப்படி என்பதை பார்ப்போம். 15+15+25 பார்முலாவில், முதல் 15 என்பது மாதாந்திர எஸ்ஐபி ரூ.15,000-த்தை குறிக்கிறது. இரண்டாவது 15 – வருடாந்திர எஸ்ஐபி வருமானத்தை குறிக்கிறது. அதாவது மியூச்சுவல் பண்டு திட்டத்தில் கிடைக்கும் ஆண்டு வருமானம்.
மேலும் 25 என்பது ஒருவர் எஸ்ஐபி வழிமுறையில் முதலீடு செய்ய வேண்டிய ஆண்டுகளின் எண்ணிக்கையை குறிக்கிறது அதாவது ஒருவர் 25 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த பார்முலாவை பயன்படுத்தி, நீங்கள் ரூ.15,000 மாதாந்திர எஸ்ஐபி-ஐ தொடங்கி 25 ஆண்டுகள் தொடர்ந்தால், நீங்கள் 25 ஆண்டுகளில் செய்த மொத்த முதலீடு ரூ.45 லட்சமாக இருக்கும்.
25 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டுக்கு கிடைக்கும் மூலதன ஆதாயம் மட்டும் சுமார் ரூ.3.68 கோடியாக வளரும். இங்கு சராசரி ஆண்டு வருவாய் விகிதம் 15 சதவீதமாக கருதப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 25 ஆண்டுகளில் முடிவில், உங்கள் ஆரம்ப முதலீடு மற்றும் மூலதன ஆதாயத்தை சேர்த்தால் உங்களுக்கு மொத்தம் ரூ.4.13 கோடி கிடைக்கும்.
ஒரு வேளை மியூச்சுவல் பண்டு திட்டத்தில் சராசரி வருவாய் 12 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில், இந்த பார்முலாவை பயன்படுத்தி நீங்கள் ரூ.2.5 கோடி மூலதனத்தை குவிக்க முடியும். 25 ஆண்டுகளுக்கான முதலீடு ரூ.45 லட்சமாகும். இந்த முதலீட்டில் 12 சதவீத ஆண்டு வருமான விகிதத்தில், மூலதன ஆதாயம் ரூ.2.10 கோடியாக இருக்கும். மூலதன ஆதாயத்தையும் முதலீட்டு நிதியையும் கூட்டினால் மொத்த நிதி சுமார் ரூ.2.55 கோடியாக இருக்கும்.