
சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மிகவும் தயக்கம் காட்டுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. குறிப்பாக, புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் சரியான முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமடையக்கூடும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) மற்றும் மொத்த முதலீடு (Lump Sum) ஆகிய முக்கிய இரு ஆப்ஷன்கள் உள்ளன. முதலீட்டாளருக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்த தொகை அல்லது SIP இரண்டில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
SIP திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) முதலீட்டாளர்களுக்கு சந்தையில் சீரான இடைவெளியில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களுக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கிறது. SIP மூலம், முதலீட்டாளர்கள் சிறிய தவணைகளில் முதலீடு செய்கிறார்கள். சந்தை ஏற்ற இறக்கங்களின் போது இதனால் ஆபத்து குறைகிறது.
பங்குகளை சலுகை விலையில் வாங்கும் வாய்ப்பு
சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் போது முதலீட்டாளர்கள் தங்கள் SIP முதலீட்டின் அளவை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது பங்குகளை சலுகை விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது நீண்ட கால வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
SIP திட்டத்தின் 5 நன்மைகள்
1. மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் வழக்கமான முதலீடு சந்தை அபாயத்தைக் குறைக்கிறது.
2. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வது நிதி ஒழுக்கத்தை வளர்க்கிறது.
3. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்றது, சிறிய தொகைகளில் கூட முதலீடு செய்யத் தொடங்கலாம்.
4. சந்தை வீழ்ச்சியடையும் போது, அதிக அலகுகள் கிடைக்கின்றன. இது வருமானத்தை மேம்படுத்தலாம்.
5. நீண்ட காலத்திற்கு கூட்டுத்தொகையின் நன்மை என்னவென்றால், சிறிய முதலீடுகள் கூட காலப்போக்கில் பெரிய தொகைகளாக மாறும்.
மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் மொத்த முதலீடு
பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் (LUMPSUM) என்னும் மொத்த முதலீடு என்பது வங்கி எஃப்டி முதலீட்டை போன்றது. சந்தையில் மொத்த தொகையை முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். இதில், முதலீட்டாளர்கள் முழுப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்கிறார்கள். சந்தை வீழ்ச்சியடையும் போது இந்த உத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் அதிக பங்குகளை வாங்க அனுமதிக்கிறது.சந்தை வீழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மொத்த முதலீடுகள் சிறந்ததாக இருக்கலாம்.
மொத்த முதலீட்டின் 5 நன்மைகள்
1. சந்தை இறக்கத்தில் இருக்கும் போது மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம், குறைந்த விலையில் அதிக யூனிட்களை வாங்க முடியும்.
2. பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தால், ஒரு பெரிய தொகை விரைவான வருமானத்தைத் தரும்.
3. மீண்டும் மீண்டும் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை, ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.
4. வழக்கமான வருமானம் இல்லாதவர்களுக்கு இந்த முறை ஏற்றதாக இருக்கும்
5. ஹைப்ரிட் அல்லது பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டுகளில், சந்தை இயக்கத்திற்கு ஏற்ப முதலீட்டு போர்ட்ஃபோலியோ சரிசெய்யப்படுகிறது.
எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.