
இளம் வயதில் அயராது உழைத்து பணம் சம்பாதிக்கும் போது, பணத்தை சரியாக சேமித்து, அதனை வருமானம் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் நிம்மதியாக இருக்கலாம். இதற்கு தேவை சரியான திட்டமிடல் மட்டுமே. அதோடு இளமையில் சம்பாதிக்க தொடங்கும் போதே பணத்தை சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.
வருமானத்தை அள்ளித் தரும் முதலீடுகள்
இளைஞனாக இருக்கும் போது, சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே, முதலீடு செய்யத் தொடங்குவதால், 40 வயதிலேயே கோடீஸ்வரன் ஆகிவிடலாம். உங்களது சம்பாத்தியம் ரூபாய் 20000 என்று இருந்தால் கூட, அதில் 2000 ரூபாய் என்ற அளவிலாவது சேமிக்க வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப, சிறிய அளவிலான முதலீடுகள் மூலமும் வியக்கத்தக்க வருமானத்தை பெறலாம். இதற்கு பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட எஸ்ஐபி என்னும் மியுச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முதல் அரசாங்கத்திட்டங்களான NPS, PPF போன்ற திட்டங்கள் வரை பல வாய்ப்புகள் உள்ளன.
40 களில் இருக்கும் போதே கோடீஸ்வரன் ஆக நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முதலீட்டை இளமையில் தொடங்காமல் இருப்பது
இளமையில், சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது, பொழுதுபோக்கிற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் பணத்தை செலவழிக்க முன்னுரிமை கொடுப்பதால், வயதான காலத்தில், நிதி சுதந்திரத்தை அனுபவிக்க இயலாமல் போகும் வாய்ப்பு உள்ளது. முதலில் முதலீடு என்பது செலவு அல்ல, அது எதிர்காலத்திற்கான பாதுகாப்பு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொந்த வீடு வாங்க திட்டமிடாமல் இருத்தல்
வீடு சொந்தமாக இருந்தால், வாடகை வீட்டில் இருப்பதை தவிர்க்கலாம். அடிக்கடி வீடு மற்றும் பிரச்சனை, நாளுக்கு நாள் வாடகையை அதிகரிக்கும் உரிமையாளர்கள் என, பலவிதமான சிக்கல்களை தவிர்க்கலாம். அதற்கு சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே திட்டமிட வேண்டும். இதன் மூலம் இளம் வயதிலேயே, வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம். வயது ஏற ஏற வீட்டுக் கடன் வாங்குவதும், கடனை அடைப்பதும் சற்று சவாலான விஷயமாக ஆகிவிடும்.
உடல்நல காப்பீட்டின் முக்கியத்துவத்தை புறக்கணித்தல்
உடல் நலம் பாதிக்கப்படும் போது, மருத்துவமனைக்கு ஆலோசனைக்கு சென்றாலே, குறைந்தது ஆயிரம் ரூபாய் எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் எதிர்பாராத உடல்நல பிரச்சனைகள், அறுவை சிகிச்சைகள், விபத்துக்கள் போன்றவை காரணமாக, உடல் நலன் பாதிக்கப்படும் போது, மருத்துவ காப்பீடு நமக்கு பெரிதும் கை கொடுக்கும். அதோடு இளம் வயதிலேயே மருத்துவ காப்பீட்டை எடுத்தால், ப்ரீமியம் தொகையும் குறைவாக இருக்கும்.
ஆடம்பர செலவுக்காக கடன் வாங்குதல்
தேவை மற்றும் ஆடம்பர செலவுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான கல்வி செலவு, வீடு மற்றும் வாகன கடன் போன்று தேவைக்காக கடன் வாங்குவது தவிர்க்க இயலாது. ஆனால் ஆடம்பர பொருட்கள், ஆடம்பர வாகனங்கள் போன்றவற்றுக்காக, கடன் வாங்குவது நம்மை சிக்கலில் ஆழ்த்தும். எனவே இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஓய்வூதிய திட்டமிடல் செய்யாமல் இருத்தல்
ஓய்வு காலத்தில், கை நிறைய பணம் இருந்தால், யாரையும் சாராமல் கௌரவமாக தன்னம்பிக்கையுடன் வாழலாம். இதற்கு ஓய்வு காலத்தில், பென்ஷன் போல வழக்கமான வருமானம் கிடைக்க வகை செய்யும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எஸ்ஐபி போன்ற முதலீடுகளை தொடங்குவதால், கூட்டு வட்டி வருமானத்தால் பணம் பன்மடங்கு ஆவதோடு, ஓய்வூதிய காலத்தில் பென்ஷன் போல், லட்சங்களில் வருமானம் பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.