
ஓய்வூதியத் திட்டமிடல் பற்றி முன்கூட்டியே சிந்தித்து முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லோர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. பணத்தை திட்டமிட்டு சரியான முறையில் முதலீடு செய்தால், ஆயிரங்களை கோடிகளாக்கலாம். இதற்கு, சிலர் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு சிறப்பானது என நினைக்கிறார்கள். சிலர் NPS (தேசிய ஓய்வூதிய முறை) முதலீடு மிக சிறந்த தேர்வாக இருக்கும் என கருதுகிறார்கள். இந்நிலையில், நீண்ட கால முதலீட்டில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதையும், ஓய்வூதியத் திட்டமிடலுக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
SIP மற்றும் NPS இரண்டின் சிறப்பு அம்சங்களையும் ஒப்பிடுவதன் மூலம், இரண்டில் எந்த விருப்பம் சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.ஆயிரங்க்களில் செய்யப்படும் முதலீடு கோடிகளாக பெருக ஏற்ற திட்டம் எது என்பதை தேர்வு செய்ய இது உதவியாக இருக்கும்.
வருமானம் ஈட்டுவதில் SIP சிறந்த முதலீடாக இருக்கும்
மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டல், முதலீட்டாளர் ஈக்விட்டி ஃபண்டில் அல்லது கடனில் பணத்தை முதலீடு செய்யலாமா என்பதைத் தானே முடிவு செய்யலாம். நீண்ட காலத்திற்கு ஈக்விட்டி ஃபண்டைத் தேர்வுசெய்தால், ஆண்டுதோறும் 10–15% வரை வருமானத்தைப் பெறலாம். மறுபுறம், NPS திட்டத்தில் ஈக்விட்டி பங்கு குறைவாகவே உள்ளது (டையர்-1-ல் அதிகபட்சம் 75%). அதனால்தான் NPS திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் பொதுவாக 8–10% என்ற அளவிற்கு இடையில் இருக்கும். SIP திட்டத்தில் வருமானம் அதிகமாக இருந்தாலும் அபாயமும் சற்று அதிகமாக இருக்கும்.
SIP vs NPS: நெகிழ்வுத்தன்மை கொண்ட திட்டம் எது?
SIP திட்டத்தில், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்வதை நிறுத்தலாம், பணத்தை எடுக்கலாம் அல்லது முதலீட்டுத் தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். அதாவது, உங்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால் NPS திட்டத்தில் பணத்தை எடுப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் உள்ளன. நீங்கள் ஓய்வு பெறும் போது மட்டுமே முழுப் பணத்தையும் எடுக்க முடியும். அப்போதும் கூட நீங்கள் தொகையில் 60% மொத்தமாகப் பெறுவீர்கள், மீதமுள்ள 40% ஓய்வூதியம் பெற ஏதுவாக வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்.
வரி சேமிப்புக்கு NPS திட்டம் மிகவும் நன்மை பயக்கும்
முதலீட்டின் நோக்கம் வரியைச் சேமிப்பதாக இருந்தால், NPS சிறந்த தேர்வு. இதில், நீங்கள் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம் மற்றும் 80CCD (1B) பிரிவின் கீழ் கூடுதலாக ரூ.50,000 விலக்கு பெறலாம். அதாவது, ரூ.2 லட்சம் வரை மொத்த வரி சேமிப்பு இருக்கும். மறுபுறம், SIP திட்டத்தில் வரிச் சலுகை ELSS நிதியில் மட்டுமே கிடைக்கிறது, அதுவும், 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.
SIP vs NPS: இரண்டில் பாதுகாப்பான முதலீடு எது?
NPS என்பது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டமாகும், மேலும் அதன் நிதிகள் பங்குச் சந்தையிலும் அரசாங்க பத்திரங்கள் மற்றும் கடன் நிதிகளிலும் முதலீடு செய்யப்படுகின்றன. எனவே, அதில் குறைவான ரிஸ்க் உள்ளஹ்டு. நீங்கள் SIP இல் பங்கு நிதிகளைத் தேர்வுசெய்தால், ரிஸ்க் அதிகமாக இருக்கும், ஆனால் வருமானமும் அதற்கேற்ப சிறப்பாக இருக்கும்.
இரண்டுமே சிறப்பான் திட்டங்கள் தான். வரியைச் சேமிக்க விரும்புபவர்கள், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பான மற்றும் நிலையான திட்டத்தை விரும்பினால், NPS சிறந்த தேர்வாக இருக்கும். அதிக வருமானத்தை பெற நினைப்பவர்கள், சிறிது ரிஸ்க் எடுக்கலாம் என்றால், SIP உங்களுக்கு ஒரு சிறந்த வழி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.