உலகமே உற்று நோக்கும் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக இது போன்ற போர் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ‘ராக்கெட்’ வேகத்தில் உயருவதுதான் வழக்கம். ஆனால், பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை சுமார் 5.7% மற்றும் வெள்ளி விலை 9% வரை சரிந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி இந்த முறை ஏன் குறைக்கிறது? இதோ முக்கிய காரணங்கள்:
1. பலமடையும் அமெரிக்க டாலர்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் அதன் விலை உயர்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரிலேயே நடப்பதால், டாலருக்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பு உயர்கிறது. டாலர் வலுவடைந்தால், பொதுவாகவே தங்கத்தின் விலை சரியத் தொடங்கும்.
2. லாப நோக்கம் (Profit Booking)
கடந்த 2025-ம் ஆண்டிலேயே தங்கம் ஒரு மிகப்பெரிய உயர்வைச் சந்தித்திருந்தது. போர்ச் செய்தியால் தங்கம் விலை ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்தவுடன், பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை எடுக்க (Profit Booking) தங்கத்தை விற்கத் தொடங்கினர். இது விலையில் பெரும் சரிவை ஏற்படுத்தியது.
3. அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் (US Treasuries)
தற்போது முதலீட்டாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே பாதுகாப்பான புகலிடம் அல்ல. அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதாலும், டாலர் வலுவாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட அமெரிக்க அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
4. பங்குச்சந்தை சரிவும் பணப்புழக்கத் தேவையும்
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த இழப்புகளைச் சமாளிக்கவும், பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரிக்கவும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர் முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்கின்றனர். இது சந்தையில் தங்கத்தின் வரத்தை அதிகரித்து விலையைக் குறைக்கிறது.
5. போர் நீண்ட காலம் நீடிக்காது என்ற எதிர்பார்ப்பு
ரஷ்யா – உக்ரைன் போரைப் போல இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும், குறிப்பிட்ட சில நாடுகளுடன் இது முடிந்துவிடும் என்றும் உலக சந்தை கணித்துள்ளது. இந்த நம்பிக்கையால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவில் Panic Buying ஏற்படவில்லை.
ரஷ்யா – உக்ரைன் போரின் போது தங்கம் மற்றும் வெள்ளி முதன்மை புகலிடமாக இருந்தது. ஆனால் இப்போது வலுவான டாலர் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் தங்கத்தின் மினுக்கத்தைக் குறைத்துள்ளன. போரின் தீவிரம் அதிகரித்தால் மட்டுமே தங்கம் மீண்டும் தனது ஏறுமுகத்தைத் தொடங்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.