SIP (Systematic Investment Plan) என்பது சிறிய தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து, நீண்ட காலத்தில் செல்வம் உருவாக்கும் மிக எளிய மற்றும் பிரபலமான வழி.
ஆனால் இன்றும் பலர் SIP குறித்து சில தவறான நம்பிக்கைகளைக் (Myths) கொண்டிருக்கிறார்கள். இவை தவறான முடிவுகளுக்கும், குறைந்த வருமானத்துக்கும் வழிவகுக்கும்.
SIP குறித்து அதிகம் பேசப்படும் 5 Myths மற்றும் அவற்றின் உண்மையான Facts-ஐ அறிந்துகொள்வோம்.
MYTH 1: SIP எப்போதும் நல்ல வருமானம் தரும்:
பல முதலீட்டாளர்கள், குறிப்பாக புதியவர்கள், SIP தானாகவே நல்ல வருமானம் வரும் என்று நினைக்கிறார்கள். சிலர் “SIP செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரன் ஆகலாம்” என்று நம்புகிறார்கள். இதற்குக் காரணம் சமூக ஊடகங்களில் வரும் மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள்.
உண்மை:
SIP உங்களுக்கு நிச்சயமான லாபத்தை தராது. அதன் விளைவு நீங்கள் தேர்ந்தெடுத்த Fund, Market Performance, மற்றும் நீண்டகால கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது சார்ந்தது.
நீங்கள் தவறான நிதியில் முதலீடு செய்தால், SIP செய்தாலும் திருப்திகரமான லாபம் கிடைக்காது. SIP-யின் உண்மையான பயன், சந்தையின் ஏற்றத்தாழ்வுகளில் சராசரி வாங்கும் விலை குறைந்து, அதனால் மொத்த முதலீட்டின் ஆபத்து குறைவதில்தான் உள்ளது.
நினைவில் கொள்ளுங்கள்:
SIP-ல் நல்ல லாபம் வர நீண்டகாலம் (7–15 ஆண்டுகள்) தொடர வேண்டும்.
சரியான நேரத்தில், சரியான Fund வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
பொறுமையும், தொடர்ந்து முதலீடு செய்வதும் முக்கியம்.
MYTH 2: பிரபலமான எல்லா Fund-களிலும் SIP தொடங்கணும்:
புதிய முதலீட்டாளர்கள் பலர், சமூக ஊடகங்களில் பேசப்படும் பிரபல நிதிகளில் உடனே SIP தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் “அதிக Fund = அதிக லாபம்” என்று நினைக்கிறார்கள். இதனால் சிலர் 8–10 நிதிகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அவற்றை சரியாகப் புரிந்துகொள்வதே இல்லை.
உண்மை:
அதிக Fund-களில் முதலீடு செய்வதால் லாபம் கூடாது, மாறாக குழப்பம் தான் கூடும்.
உதாரணமாக, மூன்று அல்லது நான்கு Mid-Cap Funds-இல் முதலீடு செய்தால், அதே Share-களில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்ததாகிவிடும். இது Duplication, Diversification அல்ல.
சரியான வழி:
உங்கள் இலக்குகளை (குழந்தை கல்வி, வீடு வாங்குதல், ஓய்வூதியம்) வைத்து நிதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
3–5 நல்ல நிதிகளுடன் (large-cap, Flexi-cap, Mid-cap, Hybrid போன்றவை) சமநிலைப்பட்ட Portfolio-வாக அமைக்கலாம்.
MYTH 3: SIP ஆரம்பித்தால் அதை நிறுத்தக்கூடாது:
பலர் SIP தொடங்கிய பிறகு, அதை நிறுத்தினால் தவறு என்று நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு “SIP நிறுத்தினால் வருமானம் குறையும்” என்ற பயம் இருக்கும்.
உண்மை:
SIP என்பது ஒப்பந்தமல்ல. உங்கள் தேவைக்கேற்ப நிறுத்தலாம், மாற்றலாம், அல்லது இடைநிறுத்தலாம். இப்போது பல Mutual Fund நிறுவனங்கள் SIP Pause என்ற வசதியையும் வழங்குகின்றன. சில மாதங்கள் நிறுத்தி, பின்னர் மீண்டும் தொடரலாம்.
அதேபோல், உங்கள் Fund மோசமாக செயல்படுகிறதென்றால், அதை நிறுத்தி மற்றொரு நல்ல Fund-ல் SIP தொடங்கலாம்.
MYTH 4: சந்தை விழும்போது SIP நிறுத்தணும் :
சிலர் Market குறைந்தால் அல்லது சில மாதங்களுக்கு SIP லாபம் தரவில்லையென்றால் உடனே SIP நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் “நஷ்டம் ஆகுது, இப்போ நிறுத்தனும்” என்று நினைக்கிறார்கள்.
உண்மை:
சந்தை விழும்போது SIP நிறுத்துவது பெரிய தவறு!
அந்த நேரத்தில் நீங்கள் அதே தொகைக்கு அதிக யூனிட்கள் (units) வாங்குகிறீர்கள். இதை Cost Averaging என்று சொல்வார்கள்.
உதாரணம்:
₹5,000 முதலீடு செய்யும் போது NAV ₹100 என்றால், நீங்கள் 50 யூனிட் வாங்குவீர்கள்.
சந்தை விழுந்து NAV ₹80 ஆனால், அதே ₹5,000-க்கு 62.5 யூனிட் கிடைக்கும்.
அந்த கூடுதல் யூனிட்கள் நீண்ட காலத்தில் அதிக லாபம் தரும்.
எனவே, சந்தை குறையும்போது SIP நிறுத்தாமல் தொடர்வதே புத்திசாலித்தனம்.
MYTH 5: SIP ஒரு Product தான்:
இன்னும் சிலர் SIP ஒரு தனி முதலீட்டு தயாரிப்பு என்று நினைக்கிறார்கள்.
அவர்கள் “எந்த SIP வேண்டுமானாலும் பண்ணு, நிச்சயமாக லாபம் வரும்” என்கிறார்கள். இது தவறு.
உண்மை:
SIP என்பது ஒரு முதலீட்டு வழி (method) மட்டுமே.
அதாவது, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு Mutual Fund-ல் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்கிறீர்கள்.
அதனால், SIP வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால், சரியான Fund தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். Fund தரம் குறைந்திருந்தால் அல்லது மோசமாக செயல்பட்டால், SIP இருந்தாலும் நல்ல லாபம் வராது.
சுருக்கமாகச் சொன்னால்,
SIP வெற்றி பெற, Fund நன்றாக இருக்க வேண்டும்.
SIP ஒரு வசதி மட்டுமே . உண்மையான பலன் “சரியான Fund தேர்வு” மூலம் தான் கிடைக்கும்.
இன்று SIP இந்திய முதலீட்டாளர்களுக்கான ஒரு வலுவான, ஒழுக்கமான முதலீட்டு வழியாக வளர்ந்துள்ளது. ஆனால் அதில் வெற்றி பெற வேண்டுமானால், Myth-களில் சிக்காமல், சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்யுங்கள்.