
இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நிலவி வந்த தீவிர வறுமை இப்போது மிகவும் குறைவாக 5%-க்கும் கீழே குறைந்துள்ளதாக Bharat State வங்கியின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011 – 12ல், கிராமப்புற வறுமை விகிதம் 25.70 சதவீதமாக இருந்தது. இது, 2022 – 23ல் 7.20 சதவீதமாக குறைந்தது; 2023 – 24ல் 4.86 சதவீதமாக குறைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், 2023 – 24ல் நகர்ப்புற வறுமை விகிதம் 4.09 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு, 4.60 சதவீதமாக இருந்தது.
கிராமப்புறங்களில், பணம் செலவிடும் பழக்கம் அதிகரித்து இருப்பது வறுமை குறைப்புக்கு வழிவகுத்துள்ளது. மேலும், அரசு நலத்திட்ட உதவிகள் அதிகரித்து இருப்பதும், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதாலும் கிராமப்புறங்களில் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புற வறுமை விகிதம் இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைகள் எண்ணிக்கை சரிவில், நகரங்களைவிட கிராமங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளன.
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்து, புதிய கிராமப்புற நகர்ப்புற மக்களின் வறுமை குறித்த தரவுகள் வெளியாகும்போது, இந்த எண்கள் சிறிய திருத்தங்களுக்கு உள்ளாகலாம். நகர்ப்புற வறுமை இன்னும் குறையக்கூடும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குதல், கிராமப்புற வாழ்வாதாரத்தை கணிசமாக மேம்படுத்துதல் ஆகிய அரசின் நடவடிக்கைகளால் இது சாத்தியமாகி உள்ளது.
ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலங்களாகக் கருதப்பட்ட பிஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான பொருளாதார இடைவெளி கனிசாமாக குறைந்திருக்கிறது.
வறுமை நிலைகளில் இந்த கூர்மையான குறைப்பு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதிலும் நாடு முன்னேறி வருவதைக் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 10 ஆண்டுகளில் 23 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.