பல்வேறு வகையான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளுள் மிகப் பிரபலமானது டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிஸியே ஆகும். எடுக்கப்போகும் பாலிஸியில், முதலீட்டுப் பயன்கள் மற்றும் மணி பே கியாரன்டி போன்றவற்றை எதிர்பார்க்காது முழுமையான ஆயுள் காப்பீட்டு அம்சத்தை மட்டுமே எதிர்பார்க்கக்கூடியவராய் நீங்கள் இருப்பீர்களேயானால், டெர்ம் பாலிஸியே உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்
லைஃப் டெர்ம் பாலிஸியானது, பாலிஸிக்கான காலவரையறைக்குள் காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்து விட்டால், நிர்ணயிக்கப்பட்ட தொகையை அவரது வாரிசுதாரருக்கு வழங்குகிறது. இதர லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளைக் காட்டிலும் டெர்ம் பாலிஸியின் விலை மிகவும் குறைவு. டெர்ம் பாலிஸியின் முழுப் பலன்களை அடைய உதவும் ஐந்து முக்கியமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் .
எப்போது இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்?
உங்கள் பணிக்காலத்தில் முன்கூட்டியே இன்ஷூரன்ஸை வாங்குங்கள் முதலாவதாக, “விரைந்து வாங்கினால் குறைந்த கட்டணம்” என்பதே தாரக மந்திரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கான தேவையும் ஆரம்பிக்கிறது. உங்கள் வாழ்வின் பிற்பகுதியில் பாலிஸித் தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், முன்கூட்டியே எடுப்பது நல்லது. இதன் மூலம் வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளால் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் தொகை அதிகமாவதைத் தவிர்க்கலாம்.
எவ்வளவு காப்பீட்டுத் தொகை உங்களுக்குத் தேவைப்படும்?
உங்களுக்குப் பொருத்தமான அளவிலான பாலிஸியை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அப்போது தான் பாலிஸிதாரரின் இறப்புக்குப் பின்னும் அவரைச் சார்ந்தவர்கள் கணிசமான நிதி ஆதாரத்தைப் பெற்று, இயல்பான வாழ்வைத் தொடர முடியும். இன்ஷூரன்ஸ் தொகை மிகக் குறைவாக (இது உங்களைச் சார்ந்தவர்களை அவதிக்குள்ளாக்கும்) இல்லாமலும் மிக அதிகமாக (இது மிக அதிக ப்ரீமியம் தொகைக்கு வழி வகுக்கும்) இல்லாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
இன்ஷூரன்ஸ் தொகை குறைவாக இருப்பின், உங்கள் குடும்பத்தினர் அவர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்குரிய அளவுக்கு நிதியைப் பெற இயலாமல் அல்லல்பட நேரிடும். அதேபோல், மிக அதிகமான இன்ஷீரன்ஸ் எடுத்திருந்தால் தேவையின்றி அதிகப்படி காப்பீட்டுக்கான அதீத ப்ரீமியம் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் உயிரோடு இருந்தால் உங்கள் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்குமோ நீங்கள் இல்லாவிடினும் உங்கள் குடும்பம் அதே வாழ்க்கைத் தரத்திலேயே தொடரும் வகையில் திட்டமிடுங்கள்.
இஎம்ஐ (EMI)
டெர்ம் பாலிஸி எடுக்கும் போது நீங்கள் தற்சமயம் கட்டிக்கொண்டிருக்கும் இஎம்ஐ கட்டணங்கள், முதலீடுகள், குறைந்த-கால மற்றும் நீண்ட-கால இலக்குகளான குழந்தைகளின் கல்வி, திருமணம், ஹெல்த் இன்ஷூரன்ஸ், பணி ஓய்வு திட்டமிடல் போன்றவற்றைக் கருத்தில் கொள்வதோடு உங்கள் நிதி தொடர்பான இலக்கையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே எடுக்க வேண்டும்.
எவ்வளவு காப்பீடு செய்ய வேண்டும்?
பொதுவாக, பாலிஸியின் அளவு, குடும்ப உறுப்பினர்கள் சுயசார்பு நிலையை அடையும் வரை அவர்களுக்கு முழுமையான நிதி ஆதாரத்தை வழங்கும் அளவிற்கு இருக்க வேண்டியது அவசியம். என்றாலும், உங்கள் தற்போதைய ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் குறைந்த பட்சம் 10 முதல் 20 மடங்கு வரையிலாவது இருக்க வேண்டும் என்பது பொது விதி.
பொருத்தமான கால வரையறையைத் தேர்ந்தெடுங்கள் டெர்ம் பாலிஸி எடுக்கும் போது பாலிஸிக்கான பொருத்தமான கால வரையறையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் எடுக்கும் பாலிஸி உங்களுக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் குறைவான கால வரையறையைக் கொண்டிருப்பின், அக்காலகட்டத்திற்குப் பின் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித காப்புறுதியும் இல்லாது போய் விடும். மேலும், உங்கள் வாழ்வின் பிற்பகுதியில் இது போன்ற பாலிஸி வாங்குவதற்கு உங்களுக்குச் சாத்தியப்படுமா என்பது சந்தேகமே. அதே நேரத்தில், நீண்ட கால வரையறையுடன் கூடிய பாலிஸியை நீங்கள் வாங்கினீர்களானால், மேலதிக ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் இது போன்ற நீண்ட காலப் பாலிஸிகளின் விலை சற்றே அதிகமாக இருக்கும்.
திட்டமிடுங்கள்
உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை உணர்ந்து, எவ்வளவு காலம் அவர்களுக்கு உங்கள் மூலம் நிதி ஆதரவு தேவைப்படும் என்று கணித்து, அவற்றின் அடிப்படையிலேயே பாலிஸிக்கான கால வரையறையை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்களுக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் சற்றே அதிகமான கால வரையறையை உடைய லைஃ பாலிஸியை தேர்ந்தெடுக்கலாம்.
க்ளெய்ம் செட்டில்மெண்ட் ரேஷியோ (CSR):
ஒரு குறிப்பிட்ட டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிஸியை எடுக்க நீங்கள் தீர்மானித்தால், இன்ஷூரரின் க்ளெயிம் ஸெட்டில்மெண்ட் ரேஷியோ (CSR) எவ்வளவு என்பதைக் கூர்ந்து ஆராயுங்கள். CSR என்பது, ஒரு வருடத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் எழுப்பப்பட்ட மொத்த உரிமை கோரல்களுள் அந்நிறுவனத்தினால் தீர்த்து வைக்கப்பட்ட உரிமை கோரல்களின் விகிதம் என்ன என்பதைக் குறிப்பதாகும். உரிமை கோரல்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஸிஎஸ்ஆர் அதிகமாக இருக்கும் பட்சத்தில், குடும்பத்தினருக்கு ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். சுமார் 95% அல்லது அதற்கும் அதிகமான ஸிஎஸ்ஆர் இருக்கக்கூடிய இன்ஷூரரே சிறந்த தேர்வாகும்.
வாங்கும் முன் ஒப்பிடுங்கள்
சில நேரங்களில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதன் மூலம் சிறந்ததைத் தேர்வு செய்ய முடியும். டெர்ம் பாலிஸி வாங்கும் போது குறைவான விலை என்பது மட்டுமே உங்கள் இலக்காக இருக்கக்கூடாது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஸெட்டில்மெண்ட் ரேஷியோ, க்ளெயிம் ஸெட்டில்மெண்ட் ரேஷியோ மற்றும் அப்பாலிஸியின் கீழ் வழங்கப்படும் அனுகூலங்கள் போன்றவற்றையும் ஆராய வேண்டும். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அடிப்படை ப்ரீமியம் தொகையை விடச் சற்றுக் கூடுதலாக வசூலித்து, விபத்தினால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் ஆகியவற்றிற்கான இழப்பீடு போன்ற கூடுதல் வசதிகளைப் பாலிஸியுடன் இணைத்து வழங்குகின்றன. மேலும், சில நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் தொகையை மாற்றாமல், பாலிஸி காப்பீட்டின் அளவை சீரான இடைவெளிகளில் குறிப்பிட்ட சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி பணவீக்க பாதிப்பை மட்டுப்படுத்த உதவுகின்றன. பாலிஸிகளின் அம்சங்கள், விலை, சாதக, பாதகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அவற்றை ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ள ஏதுவாக ஏராளமான ஆன்லைன் போர்ட்டல்கள் உள்ளன. ஆன்லைன் சாதனத்தை உபயோகித்து ஒவ்வொரு பாலிஸியையும் அலசி ஆராய்வதோடு, உங்கள் தேவைகளை அது பூர்த்திச் செய்யுமா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்.
ப்ரீமியம் தொகையை உரிய நேரத்தில் காலதாமதமின்றிச் செலுத்தி பாலிஸியை காலவதியாகி விடாமல் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் லைஃப் இன்ஷூரன்ஸ் குறித்த தகவல்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கட்டாயம் தெரிவியுங்கள். அப்போது தான் அவர்கள் காப்பீட்டுத் தொகையைத் தேவைப்படும் நேரத்தில் பெற்று பயன் பெற முடியும். சீரான இடைவெளிகளில் ஆயுள் காப்பீட்டின் அளவை மறு ஆய்வு செய்யவும். ஏனெனில், எதிர்காலத்தில் உங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களினால் உங்கள் தேவைகளும் மாறக்கூடும்.