மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் பணம் முதலீடு செய்யும் முறையை SIP (Systematic Investment Plan) என்று சொல்வார்கள். பலர் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இல்லாமல் ஒரு மாதம் SIP கட்டணம் கழிக்கப்படாமல் போனால் பயந்து விடுகிறார்கள். “Penalty வருமா?”, “Account close ஆகிடுமா?”, “முதலீடு போயிடுமா?” என்று சந்தேகம் வரும். உண்மையில் SIP தவறிப் போனால் பெரிதாக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அந்த மாதம் தொகை கழிக்கப்படவில்லை என்றால் அந்த மாத முதலீடு மட்டும் நடக்காது. அபராதம் எதுவும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வசூலிக்காது. அடுத்த மாதம் பணம் இருந்தால் SIP வழக்கம்போல் மீண்டும் தானாகத் தொடரும்.
சில வங்கிகள் தானியங்கி கழிப்பு (auto debit) தோல்வியடைந்தால் சிறிய அளவு சேவை கட்டணம் வசூலிக்கலாம். இது மியூச்சுவல் ஃபண்ட் அபராதம் அல்ல; வங்கி விதிமுறையைப் பொறுத்தது. அதனால் SIP தேதிக்கு முன் கணக்கில் போதுமான பணம் வைத்திருப்பது நல்லது. 3 மாதங்கள் தொடர்ந்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து SIP தொகை கழிக்கப்படாமல் இருந்தால், அந்த SIP தானாகவே செயலற்ற நிலையில் (inactive) மாற்றப்படலாம்.
SIP தவறினால் உங்கள் பணம் நஷ்டமாகிவிடாது. ஆனால் நீண்டகால வளர்ச்சியில் சிறிய பாதிப்பு இருக்கும். காரணம், SIP-ன் முக்கிய பலன் என்னவெனில் சந்தை குறையும் மாதங்களிலும் முதலீடு நடப்பது. அந்த மாதங்களை தவற விட்டால் குறைந்த விலையில் கிடைக்கும் யூனிட்களை நீங்கள் வாங்கும் வாய்ப்பை இழக்கிறீர்கள்.
SIP ஒரு கட்டாய கடன் EMI அல்ல. ஒரு மாதம் அல்லது சில மாதங்கள் செலுத்தப்படவில்லை என்றால் அபராதம் அல்லது முதலீட்டு இழப்பு ஏற்படாது. ஆனால் தொடர்ந்து முதலீடு செய்தால் மட்டுமே அதன் உண்மையான பலன் கிடைக்கும். முடிந்த அளவு தொடர்ந்து முதலீடு செய்வதே சிறந்த நடைமுறை.